Home One Line P1 மொகிதின் பிரதமர் விவகாரத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம்!

மொகிதின் பிரதமர் விவகாரத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம்!

562
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்கான தேசிய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தனது கட்சியை எச்சரித்தார்.

பல அம்னோ தலைவர்களும், மூத்த தலைவர்களும், கட்சியின் பொதுச் செயலாளருமான அனுவார் மூசாவின் நிலைப்பாட்டில், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய பின்னர் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மையில், அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினருமான அனுவார், 15-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் வேட்பாளராக டான்ஸ்ரீ மொகிதினை முன்மொழிந்ததை அடுத்து இந்த விவகாரம் விமர்சனத்திற்கு ஆளானது.

#TamilSchoolmychoice

ஒரு சந்திப்புக் கூட்டத்தில் இந்த முடிவு விவாதிக்கப்பட்டதாகவும், பெர்சாத்து தலைவரான அவருக்கு இரண்டு பெரிய மலாய்- முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

“அம்னோவிற்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான முவாபாக்காட் நேஷனல் தலைவர்களுடனான சந்திப்பு குழு மட்டத்தில் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தது. அங்கு மொகிதினை பிரதமராக தொடர்ந்து ஆதரிக்க நாங்கள் ஒப்புக் கொண்டோம்.

“வரவிருக்கும் தேர்தல்களில், இரு கட்சிகளும் பிரதமராக மொகிதினை நியமிக்க அல்லது ஆதரிக்க ஒப்புக் கொண்டுள்ளன.” என்று அவர் கூறியிருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் ‘ஷெரட்டன் நகர்வு’ மூலம் நம்பிக்கைக் கூட்டணி வெளியேற்றப்பட்ட பின்னர் டாக்டர் மகாதிர் முகமட்டுக்கு பதிலாக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பிரதமராக பதவி ஏற்றார்.

இதற்கிடையே, நேற்று புதன்கிழமை அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பை பிரதமர் புத்ராஜெயாவில் ஏற்பாடு செய்திருந்தார்.

நாடு மற்றும் மக்கள் நலனுக்காக தொடர்ந்து ஆட்சி நல்ல முறையில் நடைபெற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததாக அவர் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

“பிரதமர் வேட்பாளர் மீதான விவாதத்தில் அம்னோவை இழுத்துச் செல்லக்கூடாது. மாறாக மக்களின் நலன்களை பாதுகாக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.” என்று சாஹிட் ஹமிடி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.