Home நாடு அப்துல்லா படாவி, தேசியப் பள்ளிவாசலின் மாவீரர்கள் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படுவார்!

அப்துல்லா படாவி, தேசியப் பள்ளிவாசலின் மாவீரர்கள் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படுவார்!

97
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 14) தலைநகர் தேசிய இருதயக் கழக மருத்துவமனையில் காலமான மலேசியாவின் 5-வது பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி நாளை செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் தேசியப் பள்ளிவாசலில் அமைந்துள்ள மாவீரர்கள் கல்லறையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவார்.

நல்லடக்கச் சடங்குகள் நாளை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நடைபெறும் என அப்துல்லா படாவியின் மருமகனும் முன்னாள் அமைச்சருமான கைரி ஜமாலுடின் தேசிய இருதயக் கழக மருத்துவமனையில் அறிவித்தார்.

கோலாலம்பூரிலுள்ள அவரின் இல்லத்தில் இன்று அன்னாரின் நல்லுடல் வைக்கப்பட்டு, நாளைக் காலை 11.00 மணிக்கு தேசியப் பள்ளிவாசலின் மைய வழிபாட்டு மண்டபத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும். பிற்பகல் 1.00 மணிவரை பொதுமக்கள் படாவியின் நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம்.

#TamilSchoolmychoice

முஸ்லீம் அல்லாதவர்கள் முறைப்படியான – முன்னாள் பிரதமருக்கு மரியாதை காட்டும் வண்ணம் உடையணிந்து வர வேண்டும் எனவும் கைரி கேட்டுக் கொண்டார்.

அப்துல்லா படாவியின் நல்லுடல் மாவீரர்கள் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒப்புதல் தந்துள்ளார் என்றும் கைரி தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) காலை தேசிய இருதயக் கழக மருத்துவமனையில் அப்துல்லா படாவி அனுமதிக்கப்பட்டார்.

அப்துல்லா படாவியின் இறுதித் தருணங்களில் அவரின் அன்புக்குரியவர்களும், குடும்ப உறுப்பினர்களும் அவரின் அருகில் இருந்தனர் என்றும் கைரி தெரிவித்தார்.