கோலாலம்பூர்: சீன அதிபர் ஜீ ஜின் பெங்கின் மலேசிய வருகைக்குத் தயாராகிக் கொண்டிருந்த பிரதமர் அன்வார் இப்ராகிம், எதிர்பாராதவிதமாக முன்னாள் பிரதமர் துன் அகமட் அப்துல்லா படாவியின் திடீர் மரணத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.
எனினும் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) தேசியப் பள்ளிவாசலில் நடைபெற்ற அமரர் படாவியின் இறுதிச் சடங்குகளில் அன்வார் கலந்து கொண்டு தன் இறுதி மரியாதையை செலுத்தினார்.

அன்வார் இப்ராகிம் – அப்துல்லா படாவி இருவருமே அம்னோவில்தான் தங்களின் அரசியல் பயணத்தைத் தொடங்கினர். ஆனால் காலப்போக்கில் இருவரின் பயணங்களும் திசை மாறின, படாவி அம்னோவிலேயே தன் இறுதி மூச்சு வரை தொடர்ந்தார். அன்வாரோ எதிர்க்கட்சிக் கூட்டணிகளின் தலைவராக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்தார்.
எனினும் இருவருமே பிரதமர்களாக பதவி வகித்தனர். படாவியுடன் எதிரும் புதிருமாக நீண்ட கால அரசியல் பயணத்தைக் கொண்டிருந்த அன்வார், படாவிக்கான நல்லடக்கம் தேசியப் பள்ளிவாசலின் மாவீரர் கல்லறையில் நடைபெறுவதற்கு ஒப்புதல் வழங்கி தன் கண்ணியத்தையும், படாவி மீது தான் கொண்டிருந்த மரியாதையையும் வெளிப்படுத்தினார்.