கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அரசியல்வாதி ஒருவர் உட்பட 5 பேர் மீது கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அஸ்ஹாரி ஷாஹ்ரோம் ஷெய்மி, 56; முகமட் துரை அப்துல்லா, 52; ஷேக் இஸ்மாயில் ஷேக் ஹாசன், 26; என். விக்னேஸ்வரர், 28, மற்றும் வங்காளதேசத்தைச் ஏர்ந்த , காசி நஸ்ருல், 42 – ஆகியோர் இன்று வியாழக்கிழமை (ஜூலை 9) நீதிபதி முகமட் இக்வான் முகமட் நசீர் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்ட பின்னர் அதன் அர்த்தம் புரிவதாக அவர்கள் தலையசைத்தனர்.
கடத்தல் சட்டம் கீழ், கட்டாய மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனையோடு பிரம்படியும் விதிக்கப்படலாம்.
இதற்கிடையில், ஆறாவது நபர், டத்தோ கே.ராமச்சந்திரன், ஐந்து பேரையும் ஒரே நேரத்தில் குற்றத்தில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராமச்சந்திரன் 13- வது பொதுத் தேர்தலின் போது பத்தாங் காலி மாநில சட்டமன்றத்திற்கான பிகேஆர் வேட்பாளர் ஆவார்.
அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களின்படி கட்டாய மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை எதிர்கொள்வார்.
அறுவரிடமிருந்தும் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
துணை அரசு வழக்கறிஞர் ஹக்கீம் அமீர் அப்துல் ஹமீத் பிணை வழங்கப்பட அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து நீதிமன்றம் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு மீண்டும் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
55 வயதான டத்தோஸ்ரீ அந்தஸ்து கொண்ட தொழிலதிபரின் சடலம் ஜூன் 27 அன்று பத்து 27, ஜாலான் ராவாங் பெஸ்தாரி ஜெயாவில் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்திருந்தது.
ஜூன் 10- ஆம் தேதி காலை 10.30 மணியளவில் ஜாலான் பெர்சியாரான் பெர்டானா, பண்டார் ஸ்ரீ டாமான்சாராவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது சம்பந்தப்பட்டவர் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆறுமுகம் என்று அடையாளம் காணப்பட்ட அந்தத் தொழிலதிபர், பிணைப் பணத்திற்காகக் கடத்தப்பட்டார் என்று கருதப்படுகிறது.
கடத்தப்பட்ட பின்னர் ஆறுமுகம் குடும்பத்தைத் தொடர்பு கொண்ட சந்தேக நபர்கள், 50 மில்லியன் சிங்கப்பூர் டாலர் பிணைப் பணத்தை அவரது குடும்பத்தினரிடம் இருந்து கோரினர்.
எனினும், அந்தப் பிணைப் பணத்தை குடும்பத்தினர் வழங்கவில்லை.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே ஆறுமுகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது என்று சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ பாட்சில் அகமட் தெரிவித்திருந்தார்.
கடத்தப்பட்ட பின்னர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களிலேயே ஆறுமுகம் மரணமடைந்ததாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் காவல் துறை விசாரணையில் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் ஆறுமுகத்திற்கு ஏற்கனவே அறிமுகமானவர் எனவும் பாட்சில் அகமட் குறிப்பிட்டிருந்தார்.