சிங்கப்பூர் : இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் இரவு 8.00 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திடீரென வாக்களிப்பிற்கான நேரம் இரவு 10.00 மணி வரை என தேர்தல் இலாகா நீட்டித்தது. இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதற்கிடையில் தனது தாயாரை வாக்களிக்க அழைத்துச் சென்ற நபர் ஒருவர் சமூக ஊடகங்களில் இட்ட பதிவும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தனது தாயாரிடம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார் என அந்த நபர் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
இந்தப் பதிவை மிகவும் கடுமையாகக் கருதுவதாக தேர்தல் இலாகா தெரிவித்தது. புகார் கூறியிருக்கும் நபர் முன்வந்து தெளிவான விவரங்களை வழங்க வேண்டும் எனவும் தேர்தல் இலாகா வேண்டுகோள் விடுத்தது. தங்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்களையும் தேர்தல் இலாகா அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஒரு வாக்காளர் சந்தேகங்களைக் கேட்டால் தேர்தல் அதிகாரி உரத்த குரலில் அதற்கான விளக்கங்களை, வேட்பாளர்களின் தேர்தல் பிரதிநிதிகள் கேட்கும் வண்ணம் வழங்க வேண்டும் என தேர்தல் இலாகா தெரிவித்தது.
வாக்களிப்பில் பாதுகாப்பையும், இரகசியத்தையும் உறுதிப்படுத்த எல்லா விதங்களிலும் கடுமையான நடவடிக்கைகளை தாங்கள் எடுத்ததாக தேர்தல் இலாகா தெரிவித்தது.