கோலாலம்பூர்: 97 விழுக்காடு தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துகளை அறிவித்துள்ளனர்.
அவர்களுக்கு மூன்று மாதக் காலம் வழங்கப்பட்டதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.
“கொடுக்கப்பட்ட நேரம் போதுமானது என்று நினைக்கிறேன். இதுவரையிலும் 97 விழுக்காட்டினர் தங்கள் சொத்துகளை அறிவித்துள்ளனர். இன்னும் ஐவர் அறிவிக்கவில்லை. இவர்கள் விரைவில் சமர்ப்பிக்கும் வகையில் நான் சிறப்பு கவனம் செலுத்துவேன். ” என்று இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் தெரிவித்தார்.
இது குறித்து கேள்வி எழுப்பிய கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நி சிங்கின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
கடந்த மார்ச் மாதம் தேசிய கூட்டணி மக்களவை உறுப்பினர்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று மொகிதின் அறிவித்திருந்தார்.
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் அதன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தங்கள் சொத்துகளை அறிவிக்க தீர்மானம் செய்திருந்தது.
தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைச் செய்ய சிறிது நேரம் தேவை என்று மொகிதின் கூறியிருந்தார்.
“நான் நம்பிக்கைக் கூட்டணியை வாழ்த்துகிறேன், கடந்த நிர்வாகத்தில் எல்லாம் அறிவிக்கப்பட்டதால் அது முடிந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன்.
“ஆனால், இங்கே (தேசிய கூட்டணி) நிறைய புதியவர்கள் உள்ளனர், எனவே இதற்கு சிறிது நேரம் ஆகும்” என்று அவர் கூறினார்.
பொது சொத்து அறிவிப்பு நடைமுறையை தேசிய கூட்டணி பின்தொடரும் என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹாசன் கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தார்.
ஜூலை 6-ஆம் தேதி வரை மொத்தம் 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்து அறிவிப்புகளை சமர்ப்பிக்கவில்லை என்று தக்கியுடின் கூறியிருந்தார்.
மார்ச் மாதம், சொத்துகளை அறிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாதக் காலம் அவகாசம் வழங்கப்படுகிறது என்று பிரதமர் கூறியிருந்தார்.
அதன் பிறகு நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, மூன்று மாதக் கால அவகாசம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.