ஷா ஆலாம் – சிலாங்கூர் ஷா ஆலாம் செக்ஷன் 11-இல் அமைந்திருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் 147 ஆண்டுகால பழைமை வாய்ந்தது. அண்மையக் காலமாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த இந்த ஆலயம் மத்திய அரசாங்கத்தின் கல்வியமைச்சுக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்திருக்கிறது.
கடந்த காலங்களில் இந்துக்கள் அதிகம் வழிபடக்கூடிய ஆலயமான ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உடைக்கப்பட வேண்டுமென்ற உத்தரவுக் கடிதத்தை கடந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி மத்திய அரசாங்கத்தின் சார்பில் சிலாங்கூர் மாநில நில அலுவலகம் வழங்கியது.
இந்த விவகாரம் தற்போது சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது என்று அந்த ஆலயத்தின் தலைவர் திரு. முனியாண்டி பத்திரிகைக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அவர்களின் தீவிர முயற்சியினாலும், மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கல்வியமைச்சுடனான பேச்சுவார்த்தையினாலும் இந்த ஆலயம் உடைபடுவதிலிருந்து நிறுத்தப்பட்டதற்கான கடிதம் இன்று திங்கட்கிழமை (ஜூலை 20) கிடைக்கப் பெற்றது.
கடந்த இரண்டு வாரங்களாக இந்த ஆலயம் காப்பாற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. இவ்விவகாரம் குறித்து, மஇகாவின் ஷா ஆலாம் தொகுதித் தலைவர் எஸ். முருகவேலு விக்னேஸ்வரனின் பார்வைக்குக் கொண்டுச் சென்றார்.
கல்வியமைச்சுக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் விவகாரம் குறித்து அதை உடைப்பதிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்குரிய அத்தாட்சிக் கடிதத்தையும் மஇகா இன்று பெற்றுள்ளது.
இந்த ஆலயத்தின் தலைவர் முனியாண்டி மஇகாவின் தேசியத் தலைவர் தம்மை அழைத்ததாகவும், இந்த ஆலயத்தை நாங்கள் நிச்சயமாக காப்பாற்றிக் கொடுப்போம் என்றும் உறுதி அளித்ததின் வாயிலாகவே, இந்த வெற்றியைத் தாங்கள் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அந்த வகையில் இந்த கடிதத்தைத் தாங்கள் இன்று திங்கட்கிழமை காலை பெற்றுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் மேலும் குறிப்பிட்டார்.
இந்த வெற்றியைப் பெற்றுத் தந்த டான்ஸ்ரீ ச. விக்கேஸ்வரன் அவர்களுக்கும், எஸ். முருகவேல் அவர்களுக்கும் பக்தர்களின் சார்பாக தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் முனியாண்டி கூறினார்.