புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 14 இலட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களும் தொடங்கிவிட்ட நிலையில், மகாராஷ்டிரா அரசாங்கம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறையை வழங்கியுள்ளது.
இதனிடையே, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டாக மாநிலத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் தலைவர் நசீம் கான், புதிய நடைமுறைகளை மறுஆய்வு செய்ய அமைச்சர்களின் அவசர கூட்டத்தை கூட்டுமாறு முதல்வரிடம் கேட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கம் வெளியிட்ட நடைமுறைகளின்படி, பலியிடப்பட்ட ஆடுகளை இணையத்தில் வாங்குவது மற்றும் விற்பது இதில் அடங்கியுள்ளது.
எல்லோரும் இணையத்தில் மட்டுமே ஆடுகளை வாங்குவது சாத்தியமில்லை என்று நசீம் கான் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது மத உணர்வுகளை புண்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தியோனார் சந்தை ஆடுகளை வாங்குவதற்கும், விற்பதற்குமான மிகப்பெரிய சந்தையாகும். தற்போது கொவிட்19 தொற்று பரவல் காரணமாக இது மூடப்பட்டுள்ளது.