Home One Line P1 நஜிப் வழக்கு: நீதிமன்றத்தின் முடிவை மதிக்கிறோம்!- மொகிதின்

நஜிப் வழக்கு: நீதிமன்றத்தின் முடிவை மதிக்கிறோம்!- மொகிதின்

477
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவன நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளுக்கும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றத்தின் முடிவை அரசாங்கம் மதிக்கிறது என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.

அதே நேரத்தில், அனைத்து தரப்பினரும் நாட்டின் சட்ட மற்றும் நீதித்துறை மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நாட்டின் சட்டத்துறை ஒரு சுதந்திரமான மற்றும் நடுநிலை நிறுவனமாக இருப்பதை இது பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

“நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவினால், எனது நண்பர்களின் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன்.

#TamilSchoolmychoice

“ஆயினும்கூட, தேசிய கூட்டணி அரசாங்கம் எப்போதும் சட்டத்தின் கொள்கையை நிலைநிறுத்தும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான நஜிப்பின் உரிமையையும் அரசாங்கம் மதிக்கிறது என்று மொகிதின் கூறினார்.

“நீதியை உறுதிப்படுத்த முடியும் என்பதை பிரதிபலிப்பதற்கு சட்ட செயல்முறைக்கு நாங்கள் ஒன்றாக இடம் கொடுப்போம்” என்று மொகிதின் கூறினார்.

67 வயதான நஜிப், குற்றவியல் நம்பிக்கை மோசடி, பணமோசடி மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய ஏழு குற்றச்சாட்டுகளில் நேற்று குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகட் கசாலி, நஜிப் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் வழக்கை நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றிருப்பதைக் கண்டறிந்த பின்னர் இந்த முடிவை எடுத்தார்.

ஒவ்வொரு நம்பிக்கை மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளுக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிகார மீறல் குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நஜிப்புக்கு விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சிறைத் தண்டனையை ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்த நீதிபதி உத்தரவிட்டதையடுத்து நஜிப் 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.