கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அதிகார அத்துமீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுக்கு, நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி ஒவ்வொரு குற்றத்திற்கும் நஜிப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
பணமோசடி குற்றங்களுக்காக, ஒவ்வொரு குற்றத்திற்கும் நஜிப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அனைத்து சிறைத் தண்டனைகளையும் நஜிப் ஒரே காலகட்டத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
இன்று காலையில் வழங்கிய தீர்ப்பில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நம்பிக்கை மோசடி, பணமோசடி மற்றும் அதிகார அத்துமீறல் தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் தீர்ப்பை நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி இன்று காலை 10.20 மணிக்கு, வாசித்தார்.
67 வயதான நஜிப் மீதான ஏழு குற்றச்சாட்டுகளையும் நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றிருப்பதைக் கண்டறிந்த உயர் நீதிமன்ற நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார்.
“எனவே நான் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளியாகக் கருதுகிறேன். மேலும் ஏழு குற்றச்சாட்டுகளிலும் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளியாக அறிவிக்கிறேன்” என்று நீதிபதி கூறினார்.
அரசு தரப்பு கொண்டு வந்த வழக்கு குறித்து நியாயமான சந்தேகங்களை உருவாக்க தற்காப்பு தரப்பு தவறிவிட்டது என்று முகமட் நஸ்லான் கூறினார்.
எஸ்ஆர்சி நிறுவனம் முன்னர் 1எம்டிபியின் துணை நிறுவனமாக இருந்தது. பின்னர் அது நிதி அமைச்சகத்தின் கீழ் சொந்தமாக்கப்பட்டது.
நஜிப் பிரதமராக இருந்தபோது, 1எம்டிபி ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், எஸ்ஆர்சி எமரிட்டஸ் ஆலோசகராகவும், நிதியமைச்சராகவும் இருந்தார்.