Home One Line P1 எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் ரசாக் 7 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத் தீர்ப்பு!

எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் ரசாக் 7 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத் தீர்ப்பு!

666
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நம்பிக்கை மோசடி, பணமோசடி மற்றும் அதிகார அத்துமீறல் தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

முன்னதாக, இன்று காலை 10 மணிக்கு, எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் தீர்ப்பை நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி வாசித்தார்.

#TamilSchoolmychoice

67 வயதான நஜிப் மீதான ஏழு குற்றச்சாட்டுகளையும் நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றிருப்பதைக் கண்டறிந்த உயர் நீதிமன்ற நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார்.

“எனவே நான் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளியாகக் கருதுகிறேன். மேலும் ஏழு குற்றச்சாட்டுகளிலும் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளியாக அறிவிக்கிறேன்” என்று நீதிபதி கூறினார்.

அரசு தரப்பு கொண்டு வந்த வழக்கு குறித்து நியாயமான சந்தேகங்களை உருவாக்க தற்காப்பு தரப்பு தவறிவிட்டது என்று முகமட் நஸ்லான் கூறினார்.

எஸ்ஆர்சி நிறுவனம் முன்னர் 1எம்டிபியின் துணை நிறுவனமாக இருந்தது. பின்னர் அது நிதி அமைச்சகத்தின் கீழ் சொந்தமாக்கப்பட்டது.

நஜிப் பிரதமராக இருந்தபோது, ​​1எம்டிபி ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், எஸ்ஆர்சி எமரிட்டஸ் ஆலோசகராகவும், நிதியமைச்சராகவும் இருந்தார்.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுகளுக்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் பிரிவு 23 (1)- இன் கீழ் நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கிறது. ஐந்து மடங்குக்கு குறையாத அபராதமும்  விதிக்கப்படும்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 409- இன் கீழ் நம்பிக்கை மோசடி கீழ் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதற்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி ஆகியவை விதிக்கப்படும்.

நஜிப் மீதான மீதமுள்ள மூன்று குற்றச்சாட்டுகள் பணமோசடி குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியது.

பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத நடவடிக்கை சட்டம் 2001- இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இது 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 5 மில்லியன் ரிங்கிட் அபராதம் அல்லது சம்பந்தப்பட்ட பணத்தின் ஐந்து மடங்கு அபராதம் அல்லது எது அதிகமாக இருந்தாலும் அதற்கு உட்பட்டது விதிக்கப்படும்.