கோலாலம்பூர்: கொவிட் 19 தொற்றுநோயால் சிங்கப்பூரில் வேலை இழந்த மலேசிய தொழிலாளர்களின் நிலைக்கு உரிய கவனம் செலுத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அந்த நாட்டில் மலேசிய தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு இணக்கமான தீர்வைக் கோருவதற்காக குடியரசின் மனிதவள அமைச்சகத்துடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
“மற்ற நாடுகளில் பணிபுரியும் மலேசியர்களின் நிலை குறித்து அரசாங்கம் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. சிங்கப்பூரில் மட்டுமல்ல, நாமும் சுகாதார நெருக்கடியில் இருப்பதால், அரசாங்கம் பிரச்சனையை தீர்ப்பதற்கு சாதகமான நடவடிக்கை எடுக்கும்
“அவர்கள் மலேசியாவுக்குத் திரும்பி வரும் போது கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படலாம். அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான சிறந்த வழியை அரசாங்கம் கண்டுபிடிக்கும் ” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொவிட்19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் சிங்கப்பூரில் வேலை இழந்த மலேசிய தொழிலாளர்களுக்கு உதவ அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.