கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மலேசிய சுகாதார அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
நேற்று 6 சம்பவங்களே பதிவாகியிருந்த நிலையில் இன்று புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்திருக்கிறது.
அதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் இன்னொரு கொவிட்-19 தொடர்பான மரணமும் பதிவாகியிருக்கிறது. நேற்றைய மரணத்துடன் சேர்த்து இதுவரையில் கொவிட்-19 தொடர்பான மரண எண்ணிக்கை 128 ஆக உயர்ந்திருக்கிறது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 14 சம்பவங்களில் 9 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். எஞ்சிய 5 பேர் வெளிநாட்டிலிருந்து தொற்று கண்டவர்களாவர்.
சபாவிலுள்ள லகாட் டத்து காவல் துறை தடுப்பு மையத்தில் (லோக்அப்) புதிய கொவிட்-19 தொற்றுத்திரள் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவில் எழுவர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
“பெந்தெங் எல்டி” என இந்தத் தொற்றுத் திரள் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவில் முறையான ஆவணங்கள் இல்லாத ஆறு குடியேறிகளும் ஒரு மலேசியரும் இடம் பெற்றிருக்கின்றனர்.
இந்தத் தடுப்புக் காவல் மையத்தில் பரிசோதனை நடத்தப்பட்டதில் இந்தப் புதிய தொற்றுத் திரள் கண்டுபிடிக்கப்பட்டது.
இன்றைய அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,354 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் முற்றிலும் குணமடைந்து இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,075 ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நாட்டில் மொத்தம் 151 பேர் இன்னும் மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புகளுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 5 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 3 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.