ஹாங்காங் : கொவிட்-19 தொடர்பில் உலகம் எங்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டினால் மிகவும் பயனடைந்த நிறுவனங்களில் ஒன்று சூம் (Zoom) என்ற இயங்கலை (online) வழியான கலந்துரையாடல் தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனமாகும்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால் இல்லங்களில் இருந்தே பணியாற்றிய பணியாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், பணி தொடர்பான விவகாரங்களைப் பரிமாறிக் கொள்ளவும் சூம் தொழில்நுட்பம் பெரிதும் உதவியது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அந்த நிறுவனத்தின் வருமானம் 350 விழுக்காடு அதிகரித்தது. அதன் இலாபமோ முன்பிருந்ததை விட 10 மடங்கு அதிகரித்திருக்கிறது.
நிறைய நிறுவனங்கள் சூம் சேவையைப் பெறுவதற்காக ஒப்பந்தம் செய்திருக்கின்றன. கலிபோர்னியாவைத் தலைமையகமாகக் கொண்ட சூம் நிறுவனம் ஜூலை 31 முடிந்த நிதியாண்டில் 185.7 மில்லியன் டாலரை நிகர இலாபமாகப் பதிவு செய்தது.
இது ஓராண்டுக்கு முன்னர் நிலைமையுடன் ஒப்பிடும்போது 3,300 விழுக்காடு கூடுதல் அதிகரிப்பாகும்.
வருமானம் 663.5 மில்லியன் டாலராக அதிகரித்தது. இது 355 விழுக்காடு உயர்வாகும்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சூம் நிறுவனத்தின் பங்கு விலைகளும் நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) 28 விழுக்காடு உயர்ந்தன.
ஜூலை மாதம் வரையில் 10 பேர்களுக்கு அதிகமான ஊழியர்களைக் கொண்ட 370,000 நிறுவனங்கள் சூம் சேவைக்கு பதிவு செய்திருக்கின்றன. ஓராண்டுக்கு முன்னர் இருந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது இது 460 விழுக்காடு உயர்வாகும்.
சூம் சேவைக்கு 100,000 டாலர்களுக்கும் அதிகமாகக் கட்டணம் செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து தற்போது 988 ஆக இருக்கிறது.
எக்சோன் மொபைல் என்ற மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமும் சூம் சேவைக்குப் பதிவு செய்துள்ள நிறுவனங்களுள் ஒன்றாகும்.