புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 பாதிப்பினால் நாடு அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் சுற்றுலாத் தலங்களும் அதிகமான நட்டத்தை கண்டன.
இந்தியாவில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 5 மில்லியனைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 92,605 பேர் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,133 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 5,400,619 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 86,752 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் மக்களிடத்தில் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் ஆறு மாதங்களுக்கும் மேலாக சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்பட்ட பின்னர், ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இன்று திங்கட்கிழமை காலை (செப்டம்பர் 21) மீண்டும் திறக்கப்பட்டது.
ஆக்ரா கோட்டையும் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. தொற்றுநோய் காரணமாக இரு உலக பாரம்பரிய தலங்களும் மார்ச் 17 முதல் மூடப்பட்டன.
மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தாஜ்மகாலில் ஒவ்வொரு நாளும் 5,000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பிற்பகல் 2 மணிக்கு முன் 2,500 மற்றும் அதற்குப் பிறகு அடுத்த 2,500 பேர் அனுமதிக்கப்படுவர்.
தாஜ்மகால் ஒவ்வோர் ஆண்டும் ஏழு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது.