Home One Line P1 சபா முதலமைச்சராக பெர்சாத்துவின் ஹாஜிஜி நூர் தேர்வு

சபா முதலமைச்சராக பெர்சாத்துவின் ஹாஜிஜி நூர் தேர்வு

640
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: காபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) சுலாமான் மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஜிஜி நூரை சபா முதல்வராக நியமிக்க ஒப்புக் கொண்டது. நாளை செவ்வாய்க்கிழமை அவர் பதவியேற்கவுள்ளார்.

இந்த விவகாரத்தை ஹாஜிஜி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். இதில் சபா அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின் கலந்து கொண்டார்.

“சபா முதலமைச்சராக ஹாஜிஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஜி.ஆர்.எஸ்ஸின் ஒருமித்த கருத்து மற்றும் உடன்பாட்டுடன் எட்டப்பட்டது” என்று புங் மொக்தார் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, சபா மாநில புதிய முதலமைச்சர் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சபா மாநில அரண்மனையில் பதவி உறுதிமொழி எடுப்பார் என்று  சபா மாநில தகவல் துறை ஊடக பிரிவு இன்று ஊடகங்களுக்கு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அந்த அறிக்கை, மாநில அரண்மனை அறிக்கையை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில், 38 தொகுதிகளை ஜிஆர்எஸ் என்னும் காபுங்கான் ராயாட் சபா கூட்டணி பெற்றது. ஆயினும், அக்கூட்டணி 41 வேட்பாளர்களுடன் ஆட்சி அமைக்கும் என்று அது குறிப்பிட்டிருந்தது.

ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் பிளாஸ் கூட்டணி 32 தொகுதிகளை பெற்றது. எஞ்சிய 3 தொகுதிகளை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர்.

மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி 24 தொகுதிகளை வென்றது.

இதில் பெர்சாத்து கட்சி கட்சி 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஸ்டார் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆக தேசியக் கூட்டணி சின்னத்தில் வெற்றி காணப்பட்ட தொகுதிகள் 17 ஆகும்.

தனித்து சொந்த சின்னத்தில் போட்டியிட்ட பிபிஎஸ் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தக் கட்சியும் தேசியக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. ஆக மொத்தம் 24 தொகுதிகளை தேசியக் கூட்டணி கொண்டிருக்கிறது.

தேசியக் கூட்டணியில் இணைந்திருக்கும் ஸ்டார், பிபிஎஸ் இரண்டும் அம்னோவுடன் ஒத்துப் போகாத கட்சிகள்.

தேசிய கூட்டணி பக்கம் 24 தொகுதிகள் மட்டுமே இருப்பதால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது.

இந்நிலையில் தேசிய முன்னணி கூட்டணி 14 தொகுதிகளை வென்றது. இந்த 14 தொகுதிகளையும் அம்னோ மட்டுமே வென்றது.

இதற்கிடையில், சபா முதலமைச்சர் பதவியை வேறொரு கட்சியிடம் ஒப்படைக்க தாம் தயாராக இல்லை என்று தேசிய முன்னணி தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்திருந்தார்.

புதிய மாநில முதலமைச்சராக சபா தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ராடினை முன்மொழிந்து சபா மாநில ஆளுநர் ஜூஹார் மஹிருடினுக்கு கடிதம் எழுதியுள்ளதாக சாஹிட் கூறியிருந்தார்.

பெர்சாத்து கட்சிக்கு தேசிய முன்னணி இரு முறை வழிவிட்டதாக, அதாவது, பேராக் மாநில முதலமைச்சர் பதவி மற்றும் பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

பேராக்கில் பெர்சாத்து 4 தொகுதிகளுடன் இருக்கும்போது, அம்னோவிற்கு 25 சட்டமன்றங்கள் இருப்பதாக அவர் கூறினார். ஆனால், அகமட் பைசால் அசுமுவை முதல்வராக அவர்கள் நியமிக்க ஒப்புக்கொண்டனர்.

மேலும், பெர்சாத்துவுக்கு அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்றாலும், மொகிதின் யாசின் பிரதமராக நியமிக்க அம்னோ மற்றும் ஜிபிஎஸ் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

ஆயினும், தற்போது ஹாஜிஜி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.