கோத்தா கினபாலு : சபா மாநிலத்தில் முதலமைச்சர் ஹாஜிஜி நூர்- புங் மொக்தார் இடையில் எழுந்த அரசியல் போராட்டத்தில் தற்காலிகமாக புங் மொக்தார் தோல்வியடைந்திருக்கிறார்.
நேற்று புதன்கிழமை (ஜனவரி 11) ஹாஜிஜி நூர் அறிவித்த அமைச்சரவையில் புங் மொக்தார் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக அம்னோவைச் சேர்ந்த மற்றவர்கள் அமைச்சர்களாக, துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிரதமர் அன்வார் இப்ராகிம் முன்மொழிந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தின் அடிப்படையில் சபா அமைச்சரவை அமைக்கப்பட்டிருக்கிறது. தேசிய முன்னணி தலைவர் சாஹிட் ஹாமிடியும் புதிய அமைச்சரவைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
எனினும், இந்தப் போராட்டம் இத்தோடு முடியுமா? அல்லது போர்க்குணம் கொண்ட புங் மொக்தார் ஏதாவது பிரச்சனையின் மூலம் மீண்டும் அரசியல் சர்ச்சைகளை மாநிலத்தில் உருவாக்குவாரா என அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது.
சபாவில் எழுந்திருக்கும் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 10) இந்தோனிசிய வருகையை முடித்துக் கொண்டு ஜாகர்த்தாவில் இருந்து நேரடியாக கோத்தாகினபாலு வந்தடைந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சபா முதலமைச்சர் ஹாஜிஜி முகமட் நூர் தனது பதவியில் தொடர்வதற்கு நல்லாசிகளையும் ஆதரவையும் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து சபா அரசியலில் மோதிக் கொள்ளும் தரப்புகளோடு அன்வார் இப்ராகிம் பேச்சு வார்த்தைகள் நடத்தி சுமுகமான சூழலை ஏற்டுத்தினார்.
இந்த சந்திப்பில் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியும் கலந்து கொண்டார்.
தனது இந்தோனிசியா வருகையை முடித்துக் கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரடியாக கோத்தாகினபாலு நேற்றிரவு (ஜனவரி 9) வந்தடைந்தார். வெடித்திருக்கும் சபா அரசியல் பிரச்சனையைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து வைக்கத்தான் அன்வார் கோத்தாகினபாலு வந்து சேர்ந்தார்.
நேற்றிரவு 9.40 மணியளவில் கோத்தாகினபாலு விமான நிலையம் வந்தடைந்த அவரை சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர், துணை முதலமைச்சர் ஜெஃப்ரி கித்திங்கான் உள்ளிட்ட பக்காத்தான் ஹாரப்பான் தலைவர்கள் வரவேற்றனர்.
உடனடியாக அவர்களுடன் அன்வார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன் விளைவாக சபா அரசியல் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு தற்போதைக்கு ஏற்பட்டிருக்கிறது.
MA63 என்னும் சபா, சரவாக் மாநிலங்களுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பிலான சில முக்கிய சட்டத் திருத்தங்கள் இன்று நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றன.