கோலாலம்பூர்: முன்னாள் சட்டத்துறைத் தலைவர் முகமட் அபாண்டி அலி, 2018-இல் நம்பிக்கைக் கூட்டணி நிர்வாகத்தால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளார்.
அபாண்டி நேற்று சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ள நிலையில், ஏழு நாட்களுக்குள் பதிலளிக்கப்படாவிட்டால், அதன் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
தி எட்ஜ் மார்க்கெட்ஸின் செய்தி அறிக்கையின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பதவி நீக்கம் சட்டத்திற்கு எதிரானது என்று அபாண்டி கூறினார்.
அபாண்டியின் கடிதம் சட்ட நிறுவனமான சுகோர் பால்ஜித் மற்றும் பார்ட்னர்ஸ் வழக்கறிஞர் அலுவலகம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
“தி எட்ஜ் மார்க்கெட்ஸ் ஊடகத்தில் (Theedgemarkets.com)-இல் காணப்பட்ட கடிதத்திலும், நேற்று சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் பெறப்பட்ட கடிதத்திலும், 2015-இல் ஜூலை 27- ஆம் தேதி தொடங்கி 2018 ஜூலை 26 வரை மாமன்னரின் ஒப்புதலுடன் சட்டத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டதாக அபாண்டி கூறினார்.
“2018-இல் ஏப்ரல் 6 அன்று, அப்போதைய தேசிய தலைமைச் செயலாளர் (டான்ஸ்ரீ அலி ஹம்சா), மாமன்னர் தனது நியமனத்தை 2018 ஜூலை 27 முதல் நீட்டிக்க ஒப்புக் கொண்டதாகவும், 2018 மே 7 தேதியிட்ட கடிதத்தின் மூலம் தனது சேவை நீட்டிப்பைப் பெற்றதாகவும் கூறினார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.