கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கொவிட்19 சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருந்ததால், அவர் சம்பந்தப்பட்ட 1எம்டிபியின் 2.28 பில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா ஒத்திவைக்கக் கோரிய விண்ணப்பத்தை அனுமதித்தது.
நஜிப் இன்று நீதிமன்றத்திற்கு வரவில்லை.
கொவிட்19- இன் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முன்னாள் துணை பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட அகால்புடி அறக்கட்டளையின் ஊழல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சாஹிட் மற்றும் நஜிப் கடந்த மாதம் சபா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 26- ஆம் தேதி மாநிலத் தேர்தல் முடிவடைந்த பின்னர் புதிய கொவிட்19 சம்பவங்களின் எண்ணிக்கை சபாவில் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அரசியல்வாதிகளில், தேசிய முன்னணி வேட்பாளர் பிதாஸ், சூபியான் அப்துல் காரீம் மற்றும் அம்னோ தகவல் தலைவர் ஷாரில் ஹம்டான் ஆகியோர் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகினர்.
வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா, நஜிப் தற்போது செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12 வரை தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா முன்னிலையில் தெரிவித்தார்.