கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அடுத்த தேர்தலில் தாம் போட்டியிடக்கூடும் என்ற சமிக்ஞையைக் கொடுத்துள்ளார். அவர் ஓய்வு பெறுவதை அவரது ஆதரவாளர்கள் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரின் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், 95 வயதான மகாதீர், பிரதமர் மொகிதின் யாசினுடன் இணைய முடியாது என்றும், நஜிப் ரசாக்கின் செயல்முறையைப் போன்ற உத்திகளை அவர் பயன்படுத்துவதாகக் கூறினார். அவரை எதிர்த்த அனைவரையும் மொகிதின் பலவீனப்படுத்துகிறார் என்றும் மகாதீர் கூறினார்.
15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற திட்டம் தனது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது என்று அவர் கூறினார்.
“அவர்கள் நான் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். . 95 வயதைக் கடந்த பெரும்பாலான மக்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்பது உண்மைதான். நான் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பது அதிர்ஷ்டம். ஆனால், நான் வயதாகும்போது வேகத்தை இழந்து விடுவேன் என்று அவர்கள் நினைக்கவில்லை. நான் இப்போது இருப்பதைப் போலவே அவர்கள் என்னைப் பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் என்னை விரும்புகிறார்கள், ”என்று அவர் கூறினார்.
அண்மையில், தாம் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று துன் மகாதீர் கூறியிருந்தார், இருப்பினும், அவர் தனது புதிய கட்சியான பெஜுவாங் மூலம், ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவார் என்று கியோடோ நியூஸ்சிடம் கூறியிருந்தார்.
“எனக்கு இன்னும் சிறிது நேரம் வேண்டும், ஆனால் நான் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே சேவை செய்வேன் என்று நினைக்கிறேன்.
“ஆனால், நான் 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என்று அவர் கூறியிருந்தார்.
95 வயதான டாக்டர் மகாதீர், 2018-இல் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் உலகின் மிக வயதான அரசாங்கத் தலைவராக சாதனை படைத்தார்.
1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் மலேசியாவின் பிரதமராக நீண்ட காலம் பணியாற்றினார்.