Home One Line P2 “மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” – பாடல் திறன் போட்டி வெற்றியாளர்கள்

“மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” – பாடல் திறன் போட்டி வெற்றியாளர்கள்

1244
0
SHARE
Ad
மின்னலின் மின்னும் நட்சத்திரம் வெற்றியாளர்கள்

கோலாலம்பூர் : சாமானியர்களை சாதனையாளர்களாக்கும் ஆர்டிஎம் (RTM) என்னும் மலேசிய வானொலி, தொலைக்காட்சி இலாகாவின் உன்னதமான இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக இவ்வாண்டு மின்னல் பண்பலை “மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” பாடல் திறன் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது.

திலீப் வர்மன்… சந்தேஷ் போன்ற ஏராளமானவர்களை சாதனையாளர்களாக்கிய பெருமை ஆர்டிஎம்மின் இசை மேடைக்கு உள்ளது. ஆகக் கடைசியாக 2015ஆம் ஆண்டில் நடந்தேறிய ஆர்டிஎம்மின் அய்-மின்னல் பாடல் திறன் போட்டி, இளம் கலைஞர்களை உருவாக்கியது.

மின்னும் நட்சத்திரம் 2020 முதல் நிலை வெற்றியாளர் பிரவீண்

இவ்வாண்டு, இசை ஆர்வலர்களின் ஆவலைப் பூர்த்திச் செய்ய மின்னல் பண்பலையின் “மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” பாடல் திறன் போட்டியின் இறுதிச் சுற்று அங்காசாபுரியின் ஆடிட்டோரியம் பெர்டானாவில் அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி 2020 (சனிக்கிழமை) எட்டு போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

மலாய் மொழி அல்லது தமிழ் மொழியில் பாடும் திறனை வெளிக்கொணர “மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” போட்டி ஒரு சிறந்த களமாக அமைந்தது.

நாட்டின் திறமை மிக்க இசை ஆளுமைகளான திரு பாய் ராஜ்,  திரு லாரன்ஸ் சூசை, ஆர்டிஎம் இசைப் பிரிவைச் சேர்ந்த லுக்மான் அஸீஸ் மற்றும் ராஜா முகமது ஷாம் ராஜா சாரி ஆகியோர் “மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” இறுதிச் சுற்று போட்டியின் நடுவர்களாகப் பணியாற்றினர்.

மின்னும் நட்சத்திரம் 2020 இரண்டாம் நிலை வெற்றியாளர் ஜெயா பார்கவி

‘யூக்கலெலி’ இசைக் கருவியை வாசிப்பதிலும் திறன் பெற்ற சிரம்பானை சேர்ந்த மிஷல் கிரேஸ் பிரான்சிஸ் முதல் சுற்றில் “தூது வருமா” பாடலைத்  தேர்ந்தெடுத்தார். இவர் இரண்டாம் சுற்றில், நாட்டின் முன்ணனி மலாய் பாடகி நீத்தாவோடு “ஹாஞ்சா மிம்பி” பாடலை பாடினார்.

பேராக், பீடோரைச் சேர்ந்த பிரவீன் நடராஜன் “நல்லை அல்லை” பாடலை முதல் சுற்றிலும், அமாலினா பாடலை அப்பாடலை உருவாக்கிய சொந்தக்காரர் சந்தேஷோடு பாடினார். தலைநகர், செதாப்பாக்கைச் சேர்ந்த காயத்ரி தாமோதரன் “அலேகரா அலேகரா” பாடலை முதல் சுற்றிலும், இரண்டாம் சுற்றில் நீத்தாவோடு “தெரிமா காசே” பாடலை பாடினார்.

மின்னும் நட்சத்திரம் 2020 மூன்றாம் நிலை வெற்றியாளர் ரூஹன் ரவீந்திரன்

ஈப்போவை சேர்ந்த உயிரியல் துறை மாணவியான திவியாஷினி பிரபாகரன் முதலாம் சுற்றில் “சின்ன சின்ன வண்ணக்குயில்” பாடலைத் தேர்ந்தெடுத்து பாடியதோடு  சந்தேஷோடு “ரிண்டு செதாஜாம் ரிண்டு” பாடலை இரண்டாம் சுற்றில் பாடினார். சிலாங்கூர் ரவாங்கைச் சேர்ந்த ஜெய பார்கவி சந்திர ராவ் “வூ இஸ் தி ஹீரோ” பாடலை முதலாம் சுற்றிலும் இரண்டாம் சுற்றில் காய் பஹாரோடு “ரஹ்சியா கீத்தா” பாடினார்.

மலேசிய தேசிய பல்கலைக்கழக மாணவரான தனசேகரன் மனோகரன் இந்த இறுதிச் சுற்றில் “சக்கரை நிலவே” பாடலை தனிச் சுற்றிலும் “டி சானா சின்தா டி சினி ரிண்டு” பாடலை  நாட்டின் முன்ணனி பாடகி வானி ஹஸ்ரித்தாவோடும் பாடினார்.

பகாங், குவாந்தானைப் பிறப்பிடமாக கொண்ட ரூஹன் ரவிந்திரன்  “பூந்தேனில் கலந்து” தமிழ்ப் பாடலை முதல் சுற்றிலும், இரண்டாம் சுற்றில் வானி ஹஸ்ரித்தாவோடு “பெலெங்கு ரிண்டு” பாடலை பாடினார். ஜோகூர் உலுதிராமை சேர்ந்த அருளினி ஆறுமுகம் இந்த இறுதிச் சுற்றில் “மார்கழி திங்கள்” பாடலை முதல் சுற்றிலும், இரண்டாம் சுற்றில் “ஹாத்தி ஞாவா” பாடலை காய் பஹாரோடு  பாடினார்.

இப்போட்டியின் முதல் பரிசான பத்தாயிரம் ரிங்கிட்டை “நல்லை அல்லை” பாடலைப் பாடி பேராக், பீடோரை சேர்ந்த பிரவீன் நடராஜன் தட்டிச் சென்றார். இரண்டாம் பரிசான ஏழாயிரத்தை ரவாங்கைச் சேர்ந்த ஜெயபார்கவி சந்திர ராவ் வென்றதோடு, சிறந்த மேடைப் படைப்பாளருக்கான பரிசான மூவாயிரம் பரிசுத்தொகையையும், சமூக தளத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய போட்டியாளருக்கான கிண்ணத்தையும் அவர் தட்டிச் சென்றார்.  அதே வேளையில், மூன்றாம் பரிசுத் தொகை ஐயாயிரம் ரிங்கிட்டை ரூஹன் ரவீந்திரன் பெற்றார்.

இளம் கலைஞர்களை அடையாளம் காணும் மின்னலின் இந்த உன்னத முயற்சிக்கு தொடக்கத்தில் இருந்து வற்றாத ஆதரவை வழங்கிய மின்னலின் நேயர்கள் அனைவருக்கும், இவ்வேளையில் மின்னல் பண்பலையின் நிர்வாகி திருமதி சுமதி வேடியப்பன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

திறமை… உழைப்பு… விடாமுயற்சி கொண்ட கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களின் இசைக் கனவை நனவாக்கியுள்ளது “மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020”. இதற்கு முன்பு, ஒரு சில பாடல் திறன் போட்டிகளை நடத்தி இருந்தாலும், இம்முறை மிகப் பெரிய பரிசுத் தொகையோடு இப்பாடல் திறன் போட்டி நடைபெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நேயர்கள் “மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” பாடல் திறன் போட்டியை நேரலையாகத் தொலைக்காட்சி அலைவரிசை இரண்டிலும், மின்னல் முகநூல் பக்கத்தின் மூலமாகவும் கண்டு களித்தார்கள். அதே நேரம், இப்போட்டி மின்னல் பண்பலையிலும் நேரலையாகக் ஒலியேறியது.

“மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” போட்டி குறித்த நிலவரங்களை தெரிந்துக் கொள்ள மின்னல் பண்பலையின் சமூக வலைத்தளங்களை பின் தொடரலாம்.

Instagram: @minnalfm_malaysia

Facebook: @RTMMINNALfm

YouTube: @MinnalfmRTM

Twitter: @MINNALfm 

மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020 இறுதிச் சுற்றின் மேலும் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்: