மும்பை, ஏப்ரல் -15 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் சிறைக்கு செல்வதில் தமக்கு அவகாசம் வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 1993-ம் ஆண்டில் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 251 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய்தத் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, ஆயுதங்கள் பதுக்கவும் உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவருக்கு சுப்ரீம் கோர்ட் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே அவருக்கு அவகாசம் அளித்து வரும் 18 ம் தேதி அவர் சிறை செல்ல வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து இவரது தண்டனை குறைக்க வழி செய்ய வேண்டும் என அம்மாநில பல்வேறு அமைப்பினர் ஆதரவு குரல் கொடுத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த சஞ்சய்தத், கோர்ட் உத்தரவின் படி சிறை செல்வேன். தண்டனையை குறைக்க கோர மாட்டேன். இது வரை என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள் என கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.
இந்நிலையில் இவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் , படப்பிடிப்பு தொடர்பாக இன்னும் வேலை இருப்பதால் உரிய நேரத்தில் சிறைக்கு செல்ல முடியவில்லை, இதனால் தமக்கு இன்னும் 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.