வடகொரியா, ஏப்ரல்- 15 பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
எனினும், மீண்டும் ஏவுகணைச் சோதனைகளை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவையும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும்.
அமெரிக்காவையும் தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென் கொரியா கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இது தென் கொரியாவின் தந்திரம் என்று கூறி இந்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.
தென் கொரியா தனது மோதல் போக்கைக் கைவிடும் வரை அதனுடன் பேச்சு நடத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று வடகொரிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் அரசு, தலைநகர் டோக்கியோவைச் சுற்றிலும் பேட்ரியாட் ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.