சென்னை, ஏப்ரல் 15- எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழியல் பண்பாட்டுப் புலத்தின் கூட்ட அரங்கில் “கணினி, அலைபேசியில் தமிழ்ப் பயன்பாடு – இன்றைய நிலை” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது.
இக்கருத்தரங்கில், நமது நாட்டின் புகழ்பெற்ற கணினி வல்லுநர் மற்றும் செல்லியல்.காம்மின் தொழில்நுட்ப நிர்மாணிப்பாளர் திரு.முத்து நெடுமாறன் அவர்கள், இன்றைய நிலையில் கணினி, அலைபேசியில் தமிழ்ப் பயன்பாட்டின் வளர்ச்சி நிலை மற்றும் தொலைநிலைக் கல்வி முறையில் கற்றல், கற்பித்தலில் கணினித் தமிழின் பயன்பாடு ஆகியவை குறித்து சிறப்புரையாற்றவுள்ளார்.
இந்நிகழ்வானது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகிய பேராசிரியர் முனைவர் திருமதி சந்திரகாந்தா ஜெயபாலன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கில், பொது நிர்வாகவியலைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் சு.விஜயன் அவர்கள் வரவேற்புரையாற்றவுள்ளார்.
அவரையடுத்து, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பதிவாளர் முனைவர் கி.முருகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கவுள்ளார்.
இறுதியாக, தமிழியல் பண்பாட்டுப் புலத்தைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் சு.பாலசுப்பிரமணியன் அவர்கள் நன்றியுரை ஆற்றுவார்.