கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 660 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம், மொத்தமாக நாட்டில் 16,880 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
கொவிட்19 தொற்று தொடங்கியதிலிருந்து கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி 691 சம்பவங்கள் பதிவாகின. மலேசிய வரலாற்றில் இதுவே மிக அதிகமான எண்ணிக்கையாக அப்போது அறிவிக்கப்பட்டது.
350 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள நிலையில், மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 11,372- ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா முகநூல் பக்கத்தின் வழி நேரலையாக ஒளிபரப்பான இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதுவரையிலும் குணமடைந்து வெளியான எண்ணிக்கையில் இதுவே அதிகமானது என்று அவர் கூறினார்.
மொத்தம் 5,345 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 101 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 32 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று புதிதாக 4 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மரணங்களின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது.
சபாவில் அதிகமாக 443 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கெடாவில் 60 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சிலாங்கூரில் 76 சம்பவங்களும் பதிவாகி உள்ளன.