கோலாலம்பூர்: கடந்த புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட கொவிட்-19 பரிசோதனைகளின் விளைவாக இரண்டு தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தலைமை நாடாளுமன்ற நிர்வாகி டத்தோ காமிஸ் சாமின் தெரிவித்தார்.
இரண்டு தொற்று சம்பவங்களில் ஓர் ஊடக அதிகாரி மற்றும் செனட்டரின் அதிகாரி ஒருவருக்கு சம்பந்தப்பட்டதாக அவர் கூறினார்.
“பரிசோதனை முடிவுகள் கிடைத்த உடனேயே இரு சம்பவங்களும் சுகாதார அமைச்சினால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மக்களவை கூட்டத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் துணை காவல் துறை அதிகாரிகள், அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து அதிகாரிகள், நாடாளுமன்ற ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இருப்பினும், சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம், அனைத்து நாடாளுமன்ற ஊழியர்களும் எதிர்மறையான முடிவுகளைக் கொண்டிருந்தனர்.
இந்த வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் 2021 வரவு செலவு திட்டம் தாக்கல் சீராக நடத்துவதை உறுதி செய்வதற்காக கொவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க நாடாளுமன்றம் பல்வேறு முயற்சிகளையும் பொருத்தமான ஏற்பாடுகளையும் மேற்கொண்டதாக அவர் கூறினார்.