கோலாலம்பூர்: 52 வயதான செனட்டர் ராஸ் ஆடிபா முகமட் ராட்ஸி, மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி இவராவார்.
தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைபுடின் அப்துல்லா, நவம்பர் 23 (நேற்று) முதல் மூன்று ஆண்டுகள் ராஸ் அடிபா அப்பொறுப்பில் பணியாற்றுவார் என்று அறிவித்தார்.
மூத்த தொலைக்காட்சி ஆளுமையான அவரின் நியமனம் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் ஒப்புதலைப் பெற்றுள்ளது என்று சைபுடின் கூறினார்.
ராஸ் ஆடிபா தேசிய செய்தி நிறுவனத்தை நல்லதொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று அவர் நம்புவதாகக் கூறினார். மேலும், அதன் செய்தி விளக்கக்காட்சியின் தரத்தையும் மேம்படுத்த முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
“ஒளிபரப்புத் துறையில் அவர் அனுபவம் உள்ளவர் என்ற முறையில், செய்தி மற்றும் சமகால பிரச்சனைகளை வழங்குவதில் எங்களுக்கு (பெர்னாமா) உதவும் தேவையான அனுபவம் அவருக்கு இருப்பதாக நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு மே மாதம் செனட்டராக நியமிக்கப்பட்ட ராஸ் ஆடிபா, ஆகஸ்ட் 6-ஆம் தேதி பெர்னாமாவின் முன்னாள் தலைவரான சுஹைமி சுலைமான் அப்பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.