கோலாலம்பூர்: கடன் தள்ளுபடி நீட்டிப்பு அனைவருக்கும் வழங்க இயலாது என்று மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நாடாளுமன்றத்தில் கூறினார்.
சில துறைகள் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பாக இயங்கி வருவதால், அவர்களுக்கு இந்த சலுகைகள் தேவைப்படாது என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக நிதியமைச்சு முழுமையாக ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். ஒரு புதிய அணுகலுடன் அரசு மீண்டும் சில மாற்றங்களை அறிவிக்கலாம் என்று அவர் கூறினார்.
“உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். வேலை இழந்தவர்களுக்கு இந்த உதவி சென்றடைய வேண்டும். ஆனால், கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிப்பது என்பது அனைவருக்கும் பொருந்தாது. எல்லா துறைகளுக்கும் நாம் வழங்க முடியாது,” என்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங், வேலை இழந்தவர்களுக்கான உதவிகள் குறித்து வினவிய போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெற இருக்கும் வரவு செலவு திட்ட வாக்களிப்புக்கு ஆதரவு தெரிவிக்க தேசிய முன்னணி அதன் இரண்டு பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டதாக அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் கூறியிருந்தார்.
இதனை ஆய்வு செய்ய நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருலுக்கு வருகிற வியாழக்கிழமை வரையிலும் கால அவகாசம் உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
“வரவு செலவு திட்டம் குறித்தும் பேசினோம். இன்னமும் நாம் வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கிறோம், ஆனால், எங்களது இரண்டு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுகிறோம். இதனை ஆய்வு செய்ய வியாழக்கிழமை வரை அவர்களுக்கு நேரம் உள்ளது. இந்த இரண்டு பரிந்துரைகளும் வரவு செலவு திட்ட இறுதி அறிக்கையில் இணைக்கப்படும் என்று நினைக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்த இரண்டு பரிந்துரைகள் என்னவென்று அகமட் மஸ்லான் விரிவாகக் கூறவில்லை.
ஆனால், அவர் நஜிப் ரசாக் முன்வைக்கும் ஈபிஎப் கணக்கு 1-லிருந்து 10,000 ரிங்கிட் திரும்பப் பெறுவதையும், கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து பேசுவதாகக் கருதப்படுகிறது.