கோலாலம்பூர்: 2018- ஆம் ஆண்டில் நம்பிக்கைக் கூட்டணி நிர்வாகத்தின் போது இரத்து செய்யப்பட்ட தேசிய சேவை பயிற்சி திட்டத்தை (பிஎல்கேஎன்) மீண்டும் ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் பள்ளியை விட்டு வெளியேறிய பின்னர் அதில் பங்கேற்ற இளைஞர்களிடையே தேசபக்தி உணர்வை அதிகரித்துள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
“பிஎல்கேஎன் 2018- இல் இரத்து செய்யப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களிடையே தேசபக்தியின் வளர்ச்சியில் முன்னேற்றத்தைக் காண முடிந்ததன் அடிப்படையில், இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அமைச்சகம் அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யும், ” என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியின் போது, தேசிய சேவை திட்டம் அகற்றப்பட்டது.
சேவையில் ஈடுபடும்போது பல பயிற்சியாளர்கள் இறந்ததை அடுத்து தேசிய சேவை திட்டம் கடும் விமர்சனத்தை பெற்றது.
2007- ஆம் ஆண்டில், முகமட் ரபி அமீரின் குடும்பம், திரெங்கானு கெமாமானில் உள்ள ஒரு பயிற்சி முகாமில் அசுத்தமான உணவை சாப்பிட்டதாகக் கூறி 18 வயது பயிற்சியாளர் இறந்ததை அடுத்து 10 மில்லியன் ரிங்கிட் அலட்சியம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது.
மார்ச் 2012- இல், 18 வயதான பயிற்சியாளர் ஆர்.வினோத் மூன்று நாட்களுக்கு காய்ச்சலுக்கு உட்பட்டு இறந்தார். பிரேத பரிசோதனையின்படி, வினோத் லெப்டோஸ்பிரோசிஸுக்கு (எலி சிறுநீர்) ஆளானது தெரிய வந்தது.
ஜூன் 2009- இல், அப்துல் மாலிக் இஷாக், 18, பெர்லிஸ் பாடாங் பெசாரில் அவரது படுக்கையில் இறந்து கிடந்தார். அவரது உடல்நல அறிவிப்பு படிவத்தில் அவருக்கு மருத்துவ பாதிப்புகள் எதுவும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் கீழ் மேலும் பலர் தங்கள் உயிர்களை இழந்ததாக நம்பப்படுகிறது.