புவனாஸ் ஏர்ஸ் : உலகக் காற்பந்து இரசிகர்களால் என்றும் கொண்டாடப்பட்டு வந்த வித்தகன் டியகோ மரடோனா அர்ஜெண்டினாவில் மாரடைப்பால் காலமானார்.
நவம்பர் மாத தொடக்கத்தில் அவர் மூளையில் இரத்த உறைவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்பு வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் நேற்று புதன்கிழமை காலமானார்.
1986 உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றதற்கு மரடோனா முக்கிய பங்கு வகிக்கிறார். சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அர்ஜென்டினா கால்பந்து சங்கம் இந்த செய்தி குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது.
“நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் இருப்பீர்கள்,” என்று அது கூறியுள்ளது.
மரடோனா பார்சிலோனா மற்றும் நபோலி அணிக்காக விளையாடியுள்ளார் மற்றும் இத்தாலிய அணிகளுடன் இரண்டு சீரி ஏ பட்டங்களை வென்றுள்ளார்.
அர்ஜென்டினாவுக்காக 91 ஆட்டங்களில் 34 கோல்களை அடித்த அவர் நான்கு உலகக் கோப்பைகளில் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இதற்கிடையில், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் காற்பந்து நட்சத்திரத்தின் மரணத்தைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நாட்டில் துக்கம் அனுசரிக்க முடிவெடுத்துள்ளார்.