ஜாகர்த்தா : நேற்று சனிக்கிழமை (ஜனவரி 9) 62 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான போயிங் 737 இரக ஸ்ரீவிஜயா ஏர் விமான நிறுவனத்தின் பயணிகளில் மலேசியர்கள் யாருமில்லை என ஜாகர்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவித்துள்ளது.
ஜாகர்த்தாவின் சுகர்னோ – ஹாட்டா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் புறப்பட்ட 4 நிமிடங்களிலேயே இந்த விமானம் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடனான தொடர்பை இழந்து, கடலில் விழுந்தது.
ஆகக் கடைசியாக நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் அந்த ஸ்ரீவிஜயா ஏர் விமானம் விமானக் கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பு கொண்டது.
விமானப் பணியாளர்களுடன் 62 பயணிகள் அந்த விமானத்தில் இருந்தனர். அவர்களில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
அந்த விமானம் கடற்பகுதியில் விழுந்த இடத்தில் மனித உடல்களின் பாகங்களும், விமானத்தில் இருந்ததாக நம்பப்படும் பொருட்களும் மிதந்து கிடப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாகர்த்தாவிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் இந்தோனிசியாவின் போர்னியோ பகுதியிலுள்ள பொந்தியானாக் சிட்டியை நோக்கி சென்று கொண்டிருந்த்து.
விமான நிலையக் கட்டுப்பாட்டு கோபுரத் தரவுகளின்படி 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் திடீரென 250 அடிக்கு கீழ்நோக்கி விழுந்தது. அதன் பின்னர் கட்டுப்பாட்டு கோபுரத்துடனான தொடர்பை இழந்தது.
சுமார் 1 நிமிடத்தில் அதலப் பாதாளத்திற்குக் கீழிறங்கிய விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.