புத்ரா ஜெயா : பிரதமர் மொகிதின் யாசின் நேற்று மாமன்னரைச் சந்தித்தார் – புற்று நோய் தாக்கம் காரணமாக சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார் – வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் துணைப் பிரதமராக நியமிக்கப்படவிருக்கிறார் – என அடுக்கடுக்காக நேற்று முதல் பரவத் தொடங்கிய வதந்திகள் அனைத்தும் பொய் என பிரதமர் துறை அலுவலகம் அறிக்கை ஒன்றின் வழி உறுதிப்படுத்தியிருக்கிறது.
தகாத நோக்கம் கொண்டவர்களால் இத்தகைய வதந்திகள் பரப்பப்படுகின்றன என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
பிரதமருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் அவருக்கு புற்று நோய் தாக்கம் எதுவுமில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில் துணைப் பிரதமராக மொகிதின் யாசின் யாரையும் நியமிக்கப் போவதில்லை என்றும் பிரதமர் துறை அறிவித்தது.
அம்னோ, பெர்சாத்துவுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், அந்தக் கட்சியைச் சாந்தப்படுத்த அந்தக் கட்சியிலிருந்து துணைப் பிரதமர் ஒருவரை நியமிக்க மொகிதின் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி இருவரில் யாரை நியமிப்பது என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் என மொகிதின் கூறியிருப்பதாக சின் சியூ ஜிட் போ சீன நாளிதழ் நேற்று ஆரூடம் தெரிவித்திருந்தது.
இந்த ஆரூடத்தையும் பிரதமர் துறை அலுவலகம் மறுத்தது.
துணைப் பிரதமர் பதவியை அம்னோவுக்குத் தர மொகிதின் தயாராக இருப்பதாகவும், இருந்தாலும் அந்தப் பொறுப்புக்கு அம்னோ தலைவர் சாஹிடி ஹமிடியே வரவிரும்புவதாகவும், ஆனால் அவர் மீதான நீதிமன்ற வழக்குகள் காரணமாக மொகிதின் அவரை நியமிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் சின் சியூ ஜிட் போ சீன நாளிதழ் செய்தி மேலும் தெரிவித்தது.
ஹிஷாமுடின் நேற்று ஜோகூர் சுல்தானையும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கையும் சந்தித்த தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
இதற்கிடையில் பிரதமர் இன்று மாலை 6.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி, வானொலி வழி முக்கிய அறிவிப்புகளை செய்யவிருக்கிறார்.