ஜோர்ஜ் டவுன்: பினாங்கு பாலத்தின் கீழ் தீப்பிடித்த பெரிய மின்சாரம் வழங்கும் கம்பி வடத்தை (கேபிள்) சரிசெய்ய குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இன்று தெரிவித்தார்.
பழுதுபார்க்கும் பணியால் பாலத்தின் இருபுறமும் உள்ள பாதையை, சிறிது காலத்திற்கு மூட வேண்டி வரும் என்று அவர் கூறினார்.
இந்த சம்பவம் தீவின் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட காரணமாக அமைந்ததாக உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக் குழுவின் தலைவர் ஜைரில் கிர் ஜோஹாரி தெரிவித்தார்.
தீவின் சராசரி மின் தேவை 700 மெகாவாட் என்றும், அதன் தேவையை பூர்த்தி செய்ய இரண்டு மடங்கு மின் இருப்பு அதிகமாக உள்ளது என்றார் அவர்.
தெனகா நேஷனல் பெர்ஹாட் இன்று பினாங்கு பால நிர்வாகத்தினருடன் சந்திப்பை நடத்தியவுடன் விரிவான பழுதுபார்ப்பு திட்டம் பெறப்படும் என்று ஜைரில் கூறினார்.
“இதற்கிடையில், போக்குவரத்து சிக்கலைத் தவிர்ப்பதற்காக இரண்டாவது பாலத்தைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.