கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி ஆகியோர் லங்காவியில் முதல் கொவிட் -19 தடுப்பூசியை நேற்று பெற்றுக் கொண்டனர். நாட்டில் முதல் முறையாக அதிக வயதுடையவர்கள் தடுப்பூசியைப் பெற்றதும் இவர்களே.
95 வயதான மகாதிருக்கு பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி வழங்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தபட்டப் பிறகு எந்த பக்க விளைவுகளையும் உணரவில்லை என்று மகாதீர் கூறினார்.
“நான் எதையும் உணரவில்லை. எனக்கு எந்த தலைவலியும் ஏற்படவில்லை. கொவிட் -19 உடன் போராடுவதற்காக அனைத்து மலேசியர்களும் தடுப்பூசி போடுவார்கள் என்று நம்புகிறேன். இந்த தடுப்பூசி நமக்கு பாதுகாப்பு அளிக்கும், ” என்று அவர் தடுப்பூசி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி குறித்து மக்களுக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என்று மகாதீர் கூறினார்.
“சிலருக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லை என்றும் அது மற்ற நோய்களை ஏற்படுத்தும் என்று நம்புவதாகக் கேள்விப்பட்டேன். அது முற்றிலும் உண்மை இல்லை. அமெரிக்காவில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கு கூட தடுப்பூசி வழங்கப்படலாம்.
“இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டு பயனுள்ளதாக இருந்ததை அடுத்து செலுத்தப்படுகிறது. தடுப்பூசி கிடைத்த பிறகு கொவிட் -19 இலிருந்து பாதுகாக்கப்படுவதாக உணர்கிறேன். எந்த இடத்திற்கும் செல்லலாம், ” என்று அவர் மேலும் கூறினார்.