Home One Line P1 “தொழில் மாற்றங்களுக்கு ஏற்ப தயாராகுங்கள்” – சரவணனின் உலக மகளிர் தின செய்தி

“தொழில் மாற்றங்களுக்கு ஏற்ப தயாராகுங்கள்” – சரவணனின் உலக மகளிர் தின செய்தி

463
0
SHARE
Ad

இன்று உலக மகளிர் தினம். அதனை முன்னிட்டு, மனிதவள அமைச்சரும் ம.இ.கா தேசிய துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய செய்தி

உலக மகளிர் தின வாழ்த்துகள்.

உலகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் மகளிர் தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மலேசிய மகளிர் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்றான் பாரதி. அது இன்று நிதர்சனமாக நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

#TamilSchoolmychoice

“பெண்கள் நாட்டின் கண்கள்” எனும் கூற்றுக்கு ஏற்ப ஒரு குடும்பத்தின், சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்குப் பெண்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது. பல இடங்களில் உடலுறுதி கொண்ட ஆண்களைவிட, மனஉறுதி கொண்ட பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்பதை மறுக்க இயலாது. பொதுவாகவே பெண்கள் பல செயல்களை ஒரே நேரத்தில், அதுவும் நேர்த்தியாகச் செய்யக் கூடிய ஆற்றல் பெற்றுள்ளார்கள்.

ஆனாலும் இன்றைய சூழலில் நாளைக்கு நடக்கவிருப்பதைக் கணித்து, இன்றே பல மாற்றங்களுக்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டிய சூழலில் உள்ளோம். கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் மத்தியில், பல பெண்கள் தங்கள் வாழ்க்கையையும் இழந்துள்ளனர் என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் தேங்கி ஓர் இடத்தில் நின்றுவிடாமல், தொடர்ந்து செல்லும் மனஉறுதியையும், தன்னம்பிக்கையையும், ஆற்றலையும் பெண்கள் கொண்டிருப்பது மிக மிக அவசியமாகிறது.

அதே வேளையில் இந்த சர்வதேச பரவல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொழில்புரட்சி 4.0 வழியாக ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும், நாம் சந்திக்கவிருக்கிறோம். 2021 தொடங்கி 2030க்குள் புதிய ஆற்றல், புதிய நடைமுறை, புதிய தொழில்நுட்பம் என தொழிற்சந்தை அடுத்து வரும் 10 வருடங்களில் அபரீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும்.

அதற்கு ஏற்ப, அந்த தொழில்துறை மாற்றங்களைச் சந்திக்க ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். நமது திறன்களை மேம்படுத்திக் கொள்வது மட்டுமன்றி, புதிய திறங்களைக் கொண்டிருப்பதும் முக்கியம். இன்றைக்கு இருக்கும் பல தொழில்கள், திறன்கள் நாளைய வளர்ச்சியில் தேவையில்லாமல் போகலாம்.

எனவே நாம், குறிப்பாக பெண்கள் தங்கள் எதிர்காலத்திற்கான திட்டத்தை இன்றே தீட்ட வேண்டும். எதிர்பாராததை எதிர்பார்த்து அந்த திட்டம் இருக்க வேண்டும். இல்லையேல் கால ஓட்டத்தில் பின் தங்கிவிடுவோம் அல்லது காணாமல் போய்விடுவோம்.

ஆக அந்த சிந்தனையோடு அனைத்து பெண்களுக்கும் மீண்டும்
“மகளிர்தின வாழ்த்துகள்”