கோலாலம்பூர்: பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகீம் தனது ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய விண்ணப்பித்திருந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்தவொரு குறைபாடுகளும் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
தாபோங் ஹாஜி முன்னாள் தலைவரான அசிஸ் மீது 5.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளும், 139.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய ஒன்பது பண மோசடி குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
2010-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை, சாரிகாட் மெனுஜு ஆசாஸ் செண்டெரியான் பெர்ஹாட் இயக்குனர் முகமட் ரெட்சுவான் மோகனன் அப்துல்லாவிடமிருந்து அசிஸ் 5.2 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், மெனுஜு ஆசாஸ் செண்டெரியான் பெர்ஹாட், மங்க்குபூமி செண்டெரியான் பெர்ஹாட், பிண்தாஸ் உத்தாமா செண்டெரியான் பெர்ஹாட் மற்றும் ஏ.வி.பி இன்ஜினியரிங் செண்டெரியான் பெர்ஹாட் ஆகிய நான்கு நிறுவனங்களிடமிருந்து 139.3 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகவும் அவர் குற்றத்தை எதிர் நோக்குகிறார்.
இன்று பெறப்பட்ட முடிவை எதிர்த்து அசிஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய உருப்பதாக அவரது வழக்கறிஞர் அமர் ஹம்சா அர்ஷத் தெரிவித்தார்.