கோலாலம்பூர் : நாட்டின் பிரபல அரசியல்வாதி ஒருவர் மீது பாலியல் தொந்தரவு புகார் பெறப்பட்டிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்பிலான விசாரணைகள் நடைபெறுவதாக அம்பாங் ஜெயா ஓசிபிடி (காவல் நிலைய தலைவர்) துணை ஆணையர் முகமட் பாரூக் எஷாக் தெரிவித்துள்ளார்.
கிழக்குக் கரையோர மாநிலம் ஒன்றைச் சேர்ந்தவர் அந்த அரசியல்வாதியாவார் என்றும் ஆரூடங்கள் தெரிவிக்கின்றன.
2020-ஆம் ஆண்டில் இந்த பாலியல் சம்பவம் நடைபெற்றது. எனினும் கடந்த மார்ச் 16-ஆம் தேதிதான் இதுகுறித்த புகார் செய்யப்பட்டிருக்கிறது.
48 வயது வணிகப் பெண்மணி ஒருவர் இந்தப் புகாரைச் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட அரசியல்வாதியும் அவரின் மனைவியும் கடந்த ஆண்டு, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத வாக்கில் புக்கிட் மெலாவாத்தியில் உள்ள தனது இல்லம் வந்து தங்கியதாகவும் அந்த சமயத்தில் அந்த அரசியல்வாதி அதிகாலையில் தன்னை நெருங்கி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து யார் அந்த அரசியல்வாதி என்ற கேள்விகளும் இன்னுமொரு அரசியல்வாதியை உட்படுத்திய பாலியல் வழக்கு மலேசிய ஊடகங்களில் உலா வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.