கோலாலம்பூர்: டான்ஸ்ரீ மொக்சானி மகாதீர் மேக்சிஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 22 முதல் அப்பதவியிலிருந்து விலகுவதாக ராஜா டான்ஸ்ரீ அர்ஷாட் ராஜா துன் உடாவின் முடிவிற்கு ஏற்ப இந்த நியமனம் நடைமுறைக்கு வருகிறது.
2009- ஆம் ஆண்டில் புர்சா மலேசியாவில் பட்டியலிடப்பட்டதிலிருந்து அர்ஷாட் மேக்சிஸின் தலைவராக பணியாற்றியுள்ளார் என்று மேக்சிஸ் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“11 ஆண்டுகளாக மேக்சிஸின் தலைவராக பணியாற்றியது ஒரு பாக்கியம் மற்றும் மரியாதை. நாங்கள் எதைச் சாதித்தோம் என்பதையும், வேகமாக வளர்ந்து வரும் மின்னியல் சூழலில் வாடிக்கையாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் நாங்கள் எவ்வாறு தொடர்ந்து சேவை செய்கிறோம் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். குழு, நிர்வாகம் மற்றும் மேக்சிஸின் ஊழியர்களுக்கு எனது மிகுந்த பாராட்டு, அதற்காக நான் அவர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெறுகிறேன்,” என்று அர்சாட் கூறினார்.
தலைவர் பதவியை இளைய குழு உறுப்பினரிடம் விட்டுக்கொடுக்கும் நேரம் இது என்று அவர் கூறினார்.
“நான் டான்ஸ்ரீ மொக்சானியை வாழ்த்துகிறேன். பெருநிறுவன தலைவர் மற்றும் தொழில்முனைவோராக விரிவான அனுபவம் பெற்ற இவர், தொலைத் தொடர்புத் துறை பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர். மேக்சிஸ் நிறுவனம் அவரது தலைமையின் கீழ் மிகவும் வெற்றிகரமாக வளரும் என்று நான் நம்புகிறேன்,” என்று அர்ஷாட் கூறினார்.