கோலாலம்பூர் – அடுத்த ஆண்டில் அறிமுகம் காணவிருக்கும் 5-ஜி அகண்ட அலைவரிசையை சிறப்பான முறையில் செயல்படுத்த நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான மேக்சிஸ், செல்கோம் இரண்டும் கைகோர்த்திருக்கின்றன.
இதன் தொடர்பில் இன்று திங்கட்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட இந்த இரண்டு நிறுவனங்களும் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றன.
நாட்டின் மின்னுட்பத் தகவல் தொடர்பு (டிஜிடல்) சூழலை மேலும் மேம்படுத்தவும் இந்த இரண்டு நிறுவனங்களும் உடன்பாடு கண்டுள்ளன.
தங்களின் உடன்பாட்டின் அடிப்படையில் 5ஜி அமுலாக்கத்தினால் விளையக்கூடிய வணிகப் பலன்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும், இரண்டு நிறுவனங்களும் ஒப்புக் கொண்டதோடு, 5ஜி தொடர்பிலான நவீனத் தொழில்நுட்பத்தை மக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வழங்கவும் அவை உறுதி கொண்டுள்ளன.
தங்களின் உடன்பாட்டின்படி, தற்போதிருக்கும் தொலைத்தொடர்பு வசதிகளுடன், 5ஜி அகண்ட அலைவரிசை மேலும் கூடுதலான அதிநவீன தொலைத்தொடர்பு வசதிகளை வழங்கும் என்றும் மேக்சிஸ் மற்றும் செல்கோம் நிறுவனங்கள் தெரிவித்தன.
முழுமையான அளவில் செயல்படுத்தப்படும்போது 5ஜி அகண்ட அலைவரிசை மக்கள் எப்படி வேலை செய்கிறார்கள், வாழ்கிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதையே முற்றாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.