“தமிழாசியா” அகப்பக்க அறிமுக விழா – வல்லின் ம.நவீன் அறிக்கை
நவம்பர் 17 வழக்கறிஞர் சி.பசுபதி அவர்களின் பிறந்தநாள். கடந்த ஆண்டு அவருக்கு நெருக்கமான இருபது பேர் அடங்கிய நண்பர்களுடன் சிறிய அளவிலான பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் அதில் ஒருவனாகக் கலந்துகொண்டேன்.
அப்போதுதான் நண்பர் தேவாவுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. தேவாவை எனக்கு சில ஆண்டுகளாகத் தெரியும். நிதானமானவர். சிறந்த செயல்திட்டங்களை வகுப்பவர். மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். அவரிடம் கோவிட் ஊரடங்கு காலத்தில் யாழ் நிறுவனம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்துக் கூறினேன். யாழ் மலேசிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி நூல்களை தயாரிக்கும் பதிப்பகம். பள்ளிகள் அடைக்கப்பட்டதால் நூல் விநியோகிப்பதில் சிரமம் இருந்தது. தேவா, இணைய நூல் விற்பனைத் தளம் (Web Store) வழி நூல்களைக் கொண்டு செல்லும் வழிமுறைகளைக் கூறினார். என்னிடமும் அத்திட்டம் இருப்பதைக் கூறினேன். ஆனால் அத்தளத்தை உருவாக்க பெரும் பொருட்செலவு செய்ய வேண்டி வரும் என்ற தயக்கத்தைச் சொன்னேன்.
தேவா நிதானமாக “நவீன், கோவிட் ஒரு மாதிரி நோய் மட்டுமே. இவ்வுலகம் இன்னும் இதுபோன்ற பல கடுமையான சிக்கல்களை இனி வரும் காலங்களில் எதிர்கொள்ளலாம். நாம் வீடுகளில் அடைந்து கிடக்க நேரலாம். சீனர்கள் அதை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டனர். நாம் அதற்கேற்ப செயல்பட்டால் மட்டுமே நீடித்து நிலைக்க முடியும். இல்லாவிட்டால் சூழலின் மேல் பழியைப் போட்டு சுணங்கி விடுவோம்” என்றார். எனக்கு அந்தக் கூற்று முக்கியமானதாகப்பட்டது. மறுநாளே நண்பர் தர்மாவிடம் அது குறித்துப் பேசினேன். தர்மா தகவல் தொழில்நுட்பம் கற்றவர். இலக்கிய ஆர்வலர். ‘சடக்கு’ தளத்தை உருவாக்கத் துணை நின்றவர். வல்லினம் அகப்பக்க முன்னெடுப்பில் திரைமறைவில் பணியாற்றுபவர்.
அவரிடம் உரையாடியபின் நூல் விற்பனைத் தளத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல எனத்தோன்றியது. அதில் பணப் பரிமாற்றம் சம்பந்தப்படுகிறது. எனவே நிபுணத்துவத்தோடு அணுக வேண்டும். இதில் முன் அனுபவம் உள்ளவர்களுடன் இணைந்து செயல்படுவதே முழுமையான பாதுகாப்புக்கு உத்தரவாதம் என உணர்ந்தேன். நான் உடனே டாக்டர் சண்முகசிவாவின் உதவியை நாடினேன். அவர் வழி Simbiotic technologies என்ற ஒரு பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிமுகம் கிடைத்தது.
எனக்கு பொதுவாகவே மனத்தடை ஒன்றுண்டு. இலக்கியம் அல்லாத ஒன்றில் பெரிய ஈடுபாடு காட்ட முடியாது. நல்ல படைப்புகளுக்கான களம் அமைக்க “வல்லினம்” உருவானது. மூத்த படைப்பாளிகளின் வரலாற்றுத் தருணங்களைச் சேகரிக்க “சடக்கு” தயாரானது. இலக்கியச் செயல்பாடுகள், பொருளாதார போதாமையில் இருந்து மீள்வதற்காக யாழ் உருவானது.
அதனாலேயே அவை இன்றும் நிலைத்து நீடிக்கின்றன. அதன்றி எப்பணியிலும் நான் திரட்டிச் செலுத்தும் ஆர்வமெல்லாம் நீடிக்காது என்பதை அறிவேன். இந்த நூல் விற்பனைத் தளத்தை யாழ் பதிப்பக நூல்களுக்காக மட்டுமே நிறுவுவதில் எனக்குள் சுணக்கம் இருந்தது. அப்போதுதான் இவ்வெண்ணம் விரிந்து விரிந்து இலக்கியத்தை உள்ளிழுத்துக்கொண்டது.
2019-இல் நாவல் முகாமுக்காகவும் சிறுகதை பட்டறைகளுக்காகவும் தமிழகத்தில் இருந்து நூல்களை மலிவாக பங்கேற்பாளர்களுக்குத் தருவித்துக் கொடுக்க முடிந்தது நினைவுக்கு வந்தது. எனவே உருவாகப்போகும் இத்தளம் இலக்கியத்துக்கான பங்களிப்பையும் வழங்க வேண்டுமென முடிவு செய்தேன்.
மலேசியாவில் நல்ல நூல்கள் கிடைக்காததால் கிடைத்ததை வாசித்தோம்; அதையே இலக்கியம் என நம்பினோம் எனச் சொல்லும் தலைமுறை ஒன்று உண்டு. இன்று நல்ல நூல்கள் அதிக விலையாக உள்ளது. எனவே வாங்கி வாசிக்க பணமில்லை எனச் சொல்லும் தலைமுறையையும் காண்கிறேன். எனக்கு இது எப்போதும் வியப்பானது.
நான் எனது பதினேழாவது வயதில் ‘வீரா நாவல்’ எனும் புத்தகக் கடையில் வேலை செய்தேன். புத்தகங்களின் விலையைக் கடைக்காரர் ரூபாய்க்கு 25 காசு என பெருக்கச் சொல்வார். அதாவது நூறு ரூபாய் புத்தகம் 25.00 ரிங்கிட். அப்போதெல்லாம் ஒரு ரிங்கிட் பத்து ரூபாய்க்கு சமம். எனக்கு இந்தக் கணக்கே புரியவில்லை. கோலாலம்பூருக்கு மாற்றலாகி வந்த பிறகு நான் நுழைந்து பார்த்த எல்லா புத்தகக் கடைகளிலும் இதே நிலைதான். குறைந்தபட்சம் ரூபாய்க்கு 20 சென் எனும் கணக்கில் விற்றனர். தமிழக புத்தகச் சந்தைகளுக்குச் செல்லத் தொடங்கியபோதுதான் பெரிய புத்தக நிறுவனங்கள் எவ்வளவு கழிவில் நூல்களை மொத்தமாகக் கொள்முதல் செய்கின்றன என்றும் அதை எவ்வளவு அதிக லாபத்துக்கு விற்கின்றன என்றும் தெரியவந்தது. எனக்கு அதில் எந்தச் சிக்கலும் இல்லை. அது அவரவர் வணிகத் தேவை. ஆனால் இன்னொரு பக்கம் நம்மவர்கள் நூல்களை வாசிப்பதே இல்லை என்ற புலம்பலும் முரணாக இருந்தது.
நல்ல நூல்கள் பரவலான வாசிப்புக்குச் செல்ல மூன்று நடவடிக்கைகள் முக்கியம் எனக் கருதினேன்.
முதலாவது, நூல்களை முடிந்தவரை மலிவான விலைக்கு வழங்குதல். இரண்டாவது, எவை நல்ல நூல்கள் எனப் பரிந்துரை செய்தல். மூன்றாவது, நூல்கள் குறித்து உரையாடுதல். இதன் அடிப்படையில் நான் உருவாக்கும் புதிய இணையத்தளம் அமைய வேண்டுமெனக் கருதினேன். அதுகுறித்து ஆராய்ந்தேன். அவ்வகையில் ரூபாய்க்கு 10 காசு எனும் அடிப்படையில் நூல்களை விற்பனை செய்யத் திட்டம் வகுக்கப்பட்டது. தடிமனான நூல்கள், கெட்டி அட்டைக்கு தபால் செலவு அதிகம் என்பதால் நூல்கள் ரூபாய்க்கு 15 காசு என முடிவானது.
தளத்தின் பெயர் குறித்து குழப்பம் வந்தபோது பலவாறான எண்ணம் தோன்றியது. இறுதியில் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் இலக்கியம் எழுதப்பட்டாலும் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஆசிய நாடுகளில் இருந்து சென்றவர்களே. எனவே இத்தளத்துக்கு ‘தமிழாசியா’ எனும் பெயர் பொருத்தமாக அமைந்தது.
Simbiotic technologies எனும் நிறுவனத்துடன் உரையாடி நான் கற்பனையில் வைத்திருந்த அகப்பக்க தேவைகளை தர்மா பூர்த்தி செய்து கொடுத்தார். நண்பர் ‘யாவரும்’ ஜீவகரிகாலன் நூல்களை சேகரிக்கும் பணிக்கும் பெரிதும் துணைபுரிந்தார். எழுத்தாளர் சு.வேணுகோபால், “உன்னைய கத எழுத சொன்னா என்னா செஞ்சிக்கிட்டு இருக்க…” எனத் திட்டினார்.
நான் அவரிடம் இதற்கான தேவையை விரிவாக விளக்கினேன். எல்லா நூல்களுக்கும் இதில் இடமில்லை. தேர்ந்தெடுத்த நூல்களைக் கொண்டுதான் வாசிப்பு ரசனையை மேம்படுத்த முடியும். மேலும் என் நேரம் இதில் விரையமாகாது. இதை நிர்வகிக்க தகுந்த நபர்கள் உள்ளனர். நான் மேல்பார்வை மட்டுமே. எல்லா முயற்சிகளையும் மீறி நான் பொருளியல் ரீதியில் நட்டம் அடைந்தாலும் அது மேன்மையான நட்டமே. செயலுக்கான நோக்கத்தில் உண்மையுள்ளவர்கள் விளைவை எண்ணி கவலைப்படத் தேவையில்லை. ஒருவழியாகச் சமாதானம் ஆனார்.
இது வெறும் விற்பனைத் தளமாக மட்டுமல்லாமல் வாசிப்பை முன்னெடுக்கும் களமாகவும் இயங்கும் என்பதால் தகுந்த அறிமுகம் தேவை எனக் கருதினேன். இயங்கலை வழி இதற்கான ஓர் அறிமுகவிழாவை உருவாக்க நினைத்த அடுத்த கணமே எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே நினைவுக்கு வந்தார்.
என் எல்லா தொடக்கங்களிலும் அவரும் இருக்க வேண்டும் என விரும்புபவன் நான். புதிய நாவலை எழுதத் தொடங்கும்போதுகூட அவரிடம் தெரிவிப்பதையே ஆசியாகக் கருதினேன். ஆனால் இம்முறை அவரை அழைக்கத் தயக்கம் இருந்தது.
அன்பையும் நட்பையும் சுயதேவைக்காகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது என்பதில் எனக்கு எப்போதும் கவனம் இருக்கும். ‘தமிழாசியா’ தீவிர வாசிப்பு அலையை உருவாக்கும் முயற்சிக்காகத் தொடங்கப்பட்டது. வெகுசன குப்பைகளை புகழ்ந்து கொண்டிருக்கும் மலேசியாவின் மந்தமான வாசகர்களுக்கு மத்தியில் தரமான ஒரு சில வாசகர்களையாவது மலேசியாவில் உருவாக்க முடிந்தால் அதுவே இந்தத் தளத்தின் வெற்றியாகும். ஆனால் இதில் வணிகமும் உள்ளது. சமகாலத்தில் நம்முடன் வாழும் உலகின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவரை எவ்வகையிலும் என் அழைப்பு சங்கடப்படுத்தக்கூடாது என்றே யோசித்தேன். இத்தளம் சில வாரங்களுக்கு முன்பே ஏறக்குறைய தயாராகிவிட்டாலும் நிகழ்ச்சி குறித்த எண்ணம் வரும்போதெல்லாம் மனத்தடை ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. ஜெயமோகனுக்கு அழைப்பு விடுப்பதை நாளை நாளை எனத் தள்ளிப்போட்டேன்.
ஒருவழியாகச் சமாளித்து நேற்று தயக்கத்துடன் எழுத்தாளர் ஜெயமோகனிடம் கேட்டேன். இதை அவர் தவிர்த்தால் அதற்கான நியாயத்தையும் நான் உள்ளூர அறிவதை வெளிப்படையாகச் சொன்னேன். இலக்கியம் சார்ந்த பங்கெடுப்பில் தனக்கெந்த சிக்கலும் இல்லை என்றார். அவ்வார்த்தை போதுமானது. அவருக்கு புரிந்தது. நிம்மதியாக இருந்தது. இந்தத் தொடக்கம் அவர் அருகாமையால் முழுமை பெறுகிறது.
இத்தளம் குறித்த பிற விவரங்கள், பயன்படுத்தும் முறை, இதன் வழி நிகழக்கூடிய இலக்கியப் பங்களிப்பு என அனைத்தும் 27.3.2021 இரவு 8.00 மணிக்கு நடக்கும் அறிமுக நிகழ்ச்சியில் விளக்கப்படும். இந்த எண்ணம் வலுவாக, உருவாக தேவாசர்மா தூண்டுதலாக இருந்ததால் அவரையே தலைமை தாங்க அழைத்தேன். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். எப்போதும் துணையிருக்கும் எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் வாழ்த்துரையுடன் நண்பர் தர்மா இத்தளம் குறித்து விரிவாக விளக்கம் கொடுப்பார். எழுத்தாளர் ஜெயமோகன் ‘இலக்கிய வாசிப்பும் நூல்களின் தேர்வும்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.
100 பேர் கலந்துகொள்ள மட்டுமே வாய்ப்பு உள்ளது. முன்பதிவுக்கு http://launch.tamilasiabooks.com/
நண்பர்கள் இணைந்திருக்கவும். நன்றி.
தொடர்புக்கு : தமிழாசியா முகநூல்