கோலாலம்பூர்: எஸ்ஆர்சி நிறுவனத்திற்குச் சொந்தமான நிதி ஏன் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கணக்கில் செலுத்தப்பட்டது என்ற காரணத்தை, தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ மட்டுமே தெரிவிக்க முடியும் என்று நஜிப் ரசாக் வழக்கறிஞர்கள் குழு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மூன்று நீதிபதிகள் குழுவின் தலைவரான அப்துல் கரீம் அப்துல் ஜலீல், ஹர்விந்தர்ஜித்திடம், ஜோ லோ ஏன் 27 மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி நிதியை நஜிப்பின் கணக்கில் செலுத்தினார் என்று கேட்டார்.
கரீம்: ஜோ லோ ஏன் நஜிப்பின் கணக்கில் பணத்தை வைத்தார்?
ஹர்விந்தர்ஜித்: ஜோ லோ மட்டுமே அதற்கு பதிலளிக்க முடியும்.
இன்றைய விசாரணையின் போது, எஸ்ஆர்சி, காண்டிங்கான் மென்தாரி செண்டெரியான் பெர்ஹாட் , இஹ்சான் பெர்டானா செண்டெரியான் பெர்ஹாட் மற்றும் நஜிப் ஆகியோரின் கணக்குகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான பணப் பரிமாற்றத்தில் ஜோ லோ ஈடுபட்டுள்ளதாக ஹர்விந்தர்ஜித் கூறினார்.
ஜோ லோ மற்றும் பல நபர்கள் நஜிப்பின் கணக்கு சம்பந்தப்பட்ட பணத்தை செலுத்துவதில் ஈடுபட்டுள்ளதாகவும், இது குறித்து நஜிப்பிற்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நஜிப்பை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. அதிகார அத்துமீறல், மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் கண்டறிந்தது.