பிரேசில்லா: பிரேசில் முதன் முறையாக 24 மணி நேரத்தில் 4,000- க்கும் மேற்பட்ட கொவிட்-19 தொடர்பான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
மருத்துவமனைகள் நெரிசலில் உள்ளன. சில நகரங்களில் சிகிச்சைக்காக காத்திருக்கும்போது மக்கள் இறக்கிறார்கள். மேலும் சுகாதார அமைப்பு பல பகுதிகளில் சரிவின் விளிம்பில் உள்ளது.
நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 337,000- ஆக உள்ளது. இறப்பு விகிதத்தில் பிரேசில் இப்போது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது.
ஆனால், அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பாதிப்பைத் தடுப்பதற்கான எந்தவொரு தடைகளும், நடவடிக்கைகளையும் செயல்படுத்துவதை தொடர்ந்து எதிர்க்கிறார்.
பொருளாதாரத்தின் சேதம் தொற்று நோயின் தாக்கங்களை விட மோசமாக இருக்கும் என்று அவர் வாதிடுகிறார்.
முந்தைய 24 மணி நேரத்தில் 4,195 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து அவர் எந்த கருத்தும் இது வரையிலும் தெரிவிக்கவில்லை.
இன்றுவரை, பிரேசில் 13 மில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 தொற்று சம்பங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் கொவிட் -19 காரணமாக 66,570 பேர் இறந்துள்ளனர்.