கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் ஏராளமான பணத்தை செலவிட்டிருப்பதாக பிரதமர் மொகிதின் யாசின் கூறினார். 2021 வரவு செலவுத் திட்டம் மற்றும் கொவிட்-19 உதவித் தொகைக்கு 600 பில்லியன் ரிங்கிட்டை அரசு செலவிட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்
“கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நாம் நிறைய பணம் செலவிட்டுவிட்டோம். கொவிட் -19 காரணமாக 340 பில்லியன் ரிங்கிட் உதவித் தொகையும், வரவு செலவுத் திட்டத்தில் 322 பில்லியன் ரிங்கிட் திட்டமும் வழங்கப்பட்டது. இது 600 பில்லியனுக்கும் அதிகமாகும். அது ஒரு பெரிய தொகை. நான் இங்கே என்ன சொல்ல முயற்சிக்கிறேன் என்றால், நம்மிடம் அதிக பணம் இல்லை,” என்று அவர் வைசாக்கி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறினார்.
அந்நிகழ்ச்சியில் 120 சீக்கிய கோவில்களுக்கு (குருத்வாரா) 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்குவதாகவும், சீக்கிய மையத்தை கட்ட மலேசிய குருத்வாரா மன்றத்திற்கு ஒரு மில்லியன் ஒதுக்கீடு செய்வதாகவும் பிரதமர் அறிவித்தார்.
கடந்தாண்டிலிருந்து கொவிட்-19 தொற்று காரணமாக அரசாங்கம் பொது மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தது.
மார்ச் மாதத்தில், பிரதமர் 20 மில்லியன் ரிங்கிட்டுக்கு புதிய பொருளாதார ஊக்கத் தொகையை அறிவித்தார்.
இதற்கு முன்னர், 250 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பிரிஹாதின், பி.கே.எஸ் பிரிஹாதின் (10 பில்லியன் ரிங்கிட்) , பெஞ்சானா ( 35 பில்லியன்) , கித்தா பிரிஹாதின் ( 10 பில்லியன்), மற்றும் பெர்மாய் திட்டத்திற்கு 15 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் அறிவித்தது.