நீலாய் : தற்போது முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலகட்டத்தில் அதற்கான நிபந்தனைகள் முறையாகக் கடைப் பிடிக்கப்படுகின்றனவா என்பது உறுதி செய்யவும், தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றனவா என்பதை ஆராயவும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தொடர்ந்து நேரடியாகப் பரிசோதனை நடவடிக்கைகளையும், ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 4) ஆம் தேதி நீலாய் (நெகிரி செம்பிலான்) வட்டாரத்தில் அமைந்துள்ள அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு நேரடியாக அதிரடி வருகை ஒன்றை சரவணன் மேற்கொண்டார்.
அங்கு தொழிற்சாலை நிலவரங்களையும், நடமாட்டக் கட்டுப்பாட்டு நிபந்தனைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதையும் சரவணன் நேரில் கண்டறிந்தார்.
தொழிலாளர்களுக்கான சுகாதார, தங்குமிட வசதிகளையும், கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகளையும் சரவணன் பார்வையிட்டார். அவரின் பரிசோதனை நடவடிக்கையின்போது காவல் துறையினரும் மனித வள அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய சரவணன் இதுபோன்ற வழக்கமான பரிசோதனைகள் தொடரும் என்று தெரிவித்தார்.
நீலாயிலுள்ள தொழிற்சாலை 264 தொழிலாளர்களைக் கொண்டிருப்பதாகவும் அவர்களில் 95 பேர் மலேசியர்கள் என்றும் எஞ்சிய 169 பேர் அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் என்ற விவரத்தையும் சரவணன் தெரிவித்தார். தங்களின் பரிசோதனை முடிவுகளின்படி சம்பந்தப்பட்ட தொழிற்சாலை தங்களால் இயன்றவரை சட்டத்திற்குட்பட்டு, அனைத்து நிபந்தனைகளையும் அவர்கள் இயன்றவரை பின்பற்றி வருவதைக் கண்டறிந்ததாகவும் சரவணன் குறிப்பிட்டார்.
தொழிற்சாலைகளுக்கான அனுமதி குறித்து பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சரவணன், தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதி தரும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று குறிப்பிட்டார். இருப்பினும் குறிப்பிட்ட தொழிற்சாலை சட்டத்தையோ, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நிபந்தனைகளையோ மீறி செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்தத் தொழிற்சாலையை மூடும் அதிகாரம் தமது அமைச்சுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த ஆண்டு (2021) தொடங்கி, இதுவரையில் 19,010 பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் 106,593 தொழிலாளர் தங்குமிட வசதிகளும் அடங்கும். தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்க வகை செய்யும் சட்டத்திற்குட்பட்டு இதுவரையில் 742 விசாரணை அறிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு விதிமீறல்கள், குற்றங்களுக்காக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன” என்றும் சரவணன் தெரிவித்தார்.
742 விசாரணை அறிக்கைகளில் 125 விசாரணைகள் தொடர்பில் நாடு முழுவதிலும் அமர்வு நீதிமன்றங்களில் (செஷன்ஸ்) வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.
49 வழக்குகளின் வழி இதுவரையில் 352,000 ரிங்கிட் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் விதிமீறல்களுக்கான அபராதங்களாக (கம்பவுண்ட்) தொழிற்சாலைகளிடமிருந்து 2,314,000 ரிங்கிட் வசூலிக்கப்பட்டிருக்கின்றது என்றும் சரவணன் மேலும் தெரிவித்தார்.
நீலாய் தொழிற்சாலையில் சரவணன் அதிரடி பரிசோதனைகள் மேற்கொண்ட படக் காட்சிகளை இங்கே காணலாம்: