(இன்று ஜூன் 24 – காலத்தால் அழியாத மாபெரும் தமிழ்க் கவிஞன் கண்ணதாசனின் பிறந்த நாள். கண்ணதாசனுக்கு ஆண்டு தோறும் விழா எடுத்துக் கொண்டாடுபவரும், மலேசியாவில் இயங்கும் கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவருமான மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கவியரசு கண்ணதாசன் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்)
கவியரசு கண்ணதாசனின் 96ஆவது பிறந்த நாளான இன்று அவரின் எண்ணங்களையும், எழுத்துகளையும் நினைத்துப் பார்ப்பதில் இன்பம்.
காலத்தை வென்றவன், காவியம் ஆனவன் கவியரசு கண்ணதாசன்.
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”
என்ற வரிகளை தீர்க்கதரிசியாக அன்றே எழுதி வைத்துச் சென்றவர் கவியரசு கண்ணதாசன். காதல், வீரம், சோகம், சமயம், தத்துவம், வாழ்க்கை நெறி என்று அவர் தொடாத வரிகளே இல்லை. 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள், 5000-க்கும் மேற்பட்ட பாடல்கள், காவியங்கள், புதினங்கள், கட்டுரைகள் என அவரின் படைப்புகள் எண்ணிலடங்கா.
தனது வாழ்க்கையின் உண்மை அனுபவங்களையும், யாரும் காட்டத் துணியாத இருள் நிறைந்த பகுதியையும் கூட திறந்த புத்தகமாக்கியவர்.
தான் பெற்ற மோசமான அனுபவங்களைப் பிறர் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அனுபவித்து வரைந்திருக்கிறார் ஆயிரமாயிரம் எழுத்துகளை!
ஆக பிறருக்கு அறிவுரை சொல்லும் தகுதியை அவர் கொண்டுள்ளார் என்பதில் ஐயமில்லை.
“ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்
காற்றிலும் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்
ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்
மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்
பார்த்தது கோடி பட்டது கோடி
சேர்த்தது என்ன சிறந்த அனுபவம்”
அர்த்தமுள்ள இந்து மதம் எழுதியவர்தான் ஏசு காவியத்தையும் எழுதினார். இப்படி அனைத்து மதங்களும் ஒன்றே என்று சமத்துவம் பாடியவர்.
இப்படியெல்லாம் பாடுவதற்கு முன்பாக அவர் பகுத்தறிவாதியாக இறைமறுப்புக் கொள்கையைக் கொண்டிருந்தார் என்றால் நம்ப முடிகிறதா?
இலக்கியத்தையும். இதிகாசங்களையும் எளிமையாக்கியவர், பாமரனுக்கும் கொண்டு சேர்த்தவர் என்ற பெருமைக்குரியவர். உயர்ந்த கருத்துகளையும், உயர்ந்த தத்துவங்களையும் திரைப்பாடல் வழியாக சாதாரண மக்களிடமும் எளிதாகக் கொண்டு சேர்த்தார்.
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்
வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலுக்கும் வரிகளைத் தீர்வாகத் தந்தவர். இன்றைய சூழல் நாளை மாறும் என்ற நம்பிக்கையை விதைத்தவர்.
அவர் தந்த “மயக்கமா கலக்கமா” என்ற பாடலின் நம்பிக்கை வரிகள்தான் வாலியின் வாழ்விலும் நம்பிக்கையை விதைத்து நமக்குக் காவியக் கவிஞராக தந்தது.
கண்ணதாசன் பிறந்த நாளை நினைவு கூர்ந்து பார்ப்பது அவரின் வரிகளை, எழுத்துகளை, கருத்துகளை நம் வாழ்வோடு இணைத்து நமக்கு உரமாகக் கொள்ளவே.
இன்றைய தலைமுறைக்கும், நாளைய தலைமுறைக்கும் கண்ணதாசனின் எழுத்துகள் சென்றடைய வேண்டும். அதிலுள்ள ஆழமான கருத்துகள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.