மலேசியா கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மக்களாட்சி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு அமைக்கப்பட்ட முடியாட்சி நாடாகும்.


இதன் அடிப்படையில் மக்களாட்சியைப் பிரதிநிதிக்கின்ற நாடாளுமன்றத்திற்கும் மலாய் மன்னர்களைப் பிரதிநிதிக்கின்ற பேரரசருக்கும் தனி உரிமைகள், அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்த அரசியலமைப்புச் சட்டம்தான் இந்நாட்டின் முதன்மையான சட்டமென அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 4 கூறுகிறது.
மேலும் மாட்சிமை தங்கிய பேரரசர்தான் இந்நாட்டின் அரசியல் ஆட்சியமைப்புக் கட்டமைப்பில் முதன்மை நிலையில் உள்ளவர் என்று அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 32(1) கூறுகிறது.
குறிப்பாகப் பிரிவு 40 பேரரசரின் உரிமைகளையும் அரசாட்சிக் கடமைகளையும் தெளிவாகக் கூறுகிறது. அதிலே பேரரசர் நாட்டின் பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப அரசாங்கத்தை வழி நடத்த வேண்டும்.
இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமையின் அடிப்படையிலேயேதான் சமீபத்தில் மாட்சிமை தங்கிய பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தாபா பில்லாஷா அவர்கள் வெகு விரைவில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென ஆணையிட்டார்.
இதனிடையே பிரதமரின் அறிக்கையின்படி நாடாளுமன்றம் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் கூட்டப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், நாடாளுமன்றம் வெகு விரைவில் கூடுவதற்குச் சாத்தியமில்லை.காரணம் நாடாளுமன்றக் கூட்டச் சட்டத்திட்டங்களின் படி 28 நாட்களுக்கு முன் கூட்ட அழைப்பு அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
இந்தக் கூட்ட அழைப்பு அறிக்கையை வெளியிடுவதற்குப் பல தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டியிருப்பதால் நாடாளுமன்றக் கூட்டம் செப்டம்பருக்குள் கூடுவதற்குச் சற்றுக் காலதாமதமாகலாம்.
நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கும் சாத்தியம் தென்படவில்லை. ஏனென்றால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் பரிந்துரை சமர்ப்பிக்கப்பட வேண்டும். சமர்ப்பிக்கப்பட்டப் பரிந்துரையை நாடாளுமன்ற அவைத் தலைவர் ஏற்றுக் கொண்டு நாடாளுமன்றக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
அப்படியே ஆயினும் பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லையென நிரூபிக்கத் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சாத்தியமில்லையென்றே கருதலாம்.
காரணம் தற்சமயம் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான தேசிய முன்னணி, பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர மாட்டோம் என அறிக்கை வெளியிட்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மேற்கூறிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான எண்ணிகையில் இருக்கின்றனர். இச்சூழலில் மொகிதின் யாசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது சாத்தியமாகுமா?
ஒரு வேளை நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மொகிதின் யாசின் தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கத் தவறினால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 43(4) கூறுகிறது.
பதவி விலகிய பிறகு நாடாளுமன்றத்தைக் கலைக்கப் பேரரசருக்குப் பிரதமர் ஆலோசனை கூறலாம். ஆனால்,அரசியலமைப்புச் சட்டம் 40(2)(b) படி பிரதமரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தைக் கலைப்பதா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை பேரரசருக்கே உண்டு.
இருப்பினும், நாட்டில் கோவிட் அதிகரித்து வரும் இவ்வேளையில் நாடாளுமன்றத்தைக் கலைப்பது சாத்தியமா?
நமது பேரரசர் நாட்டின் மீதும் மக்கள் மீதும் அக்கறை கொள்வது மட்டுமின்றி நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டுதான் தமது அரசுக் கடமைகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார்.
ஆகவே, நாட்டு மக்களாகிய நாம், நமது பேரரசரின் அரசக் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு மதிக்க வேண்டும்.
மேலும், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் மேடையாக நாடாளுமன்றம் மாறக்கூடாது. மாறாக அரசாங்கத்தை மாற்ற வேண்டுமானால் பொதுத் தேர்தலைத் தளமாகப் பயன்படுத்துவதே ஜனநாயகத்தின் பண்பாகும்.
ஆக, பொதுத் தேர்தலின்வழி புதிய அரசாங்கத்தைத் தேர்வு செய்வதே அனைத்து மலேசியர்களின் உரிமையாகும்.