கோலாலம்பூர் : மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கங்களின் சம்மேளனப் பொறுப்பாளர்கள் திங்கட்கிழமை (ஏப்ரல் 12) மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனை மரியாதை நிமித்தம் அவரின் அலுவலகத்தில் சந்தித்தனர்.
மைக்கியின் குழுவுக்கு அதன் தலைவர் டத்தோ என்.கோபாலகிருஷ்ணன் தலைமையேற்றிருந்தார். தலைமைச் செயலாளர் டத்தோ ஏ.டி.குமாரராஜா, டத்தோ ஜோ சரவணன் ஆகியோரும் மைக்கி குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
தெற்காசிய நாடுகளுக்கான மலேசிய சிறப்புத் தூதருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரனிடம் அந்நியத் தொழிலாளர்களை மலேசியாவுக்குத் தருவிப்பது குறித்த விவகாரம் குறித்து மைக்கி பொறுப்பாளர்கள் விவாதித்தனர்.
அந்த சந்திப்பின்போது அந்நியத் தொழிலாளர்கள் குறித்தும், அந்நியத் தொழிலாளர்கள் பணிபுரியக் கூடிய துறைகள் முடக்கப்பட்டிருப்பதாக குறித்தும் மகஜர் ஒன்றை மைக்கி பொறுப்பாளர்கள் வழங்கி அதனை பிரதமரிடம் சமர்ப்பிக்கும்படி விக்னேஸ்வரனிடம் கேட்டுக் கொண்டனர்.
இது குறித்து தான் ஆய்வுகளை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுத்து தீர்வுகள் காண முயற்சிகள் எடுக்கப் போவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.