Home உலகம் சிங்கப்பூர் அதிபர் தேர்தல் : தர்மன் சண்முகரத்தினத்துடன் மேலும் இருவர் போட்டி

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் : தர்மன் சண்முகரத்தினத்துடன் மேலும் இருவர் போட்டி

596
0
SHARE
Ad
தர்மன் சண்முகரத்தினம்

சிங்கப்பூர் : விரைவில் நடைபெறவிருக்கும் சிங்கப்பூருக்கான அதிபர் தேர்தலில் முன்னாள் அமைச்சரும் முன்னாள் துணைப் பிரதமருமான தர்மன் சண்முகரத்தினம் (வயது 66) தகுதி பெற்றுள்ளார்.

அவருடன் 75 வயதான இங் கோக் சோங், 75 வயதான, டான்  கின் லியான் ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர். இங் கோக் சோங் ஜிஐஎஸ் நிறுவனத்தின் முதலீட்டு பிரிவின் முன்னாள் அதிகாரியாவார். தான் கின் லியான் என்டியுசி என்னும் தொழிற்சங்கக் காங்கிரசின் வருவாய் துறை தலைவராவார்.

வணிகரான 63 வயது ஜோர்ஜ் கோ போட்டியிட வேட்புமனு சமர்ப்பித்திருந்தாலும்  அவர் தகுதி பெறவில்லை என சிங்கப்பூர் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

#TamilSchoolmychoice

அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுவைச் சமர்ப்பித்தாலும் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அவர்களை முதலில் வேட்பாளர்களாக அங்கீகரிக்க வேண்டும். சிங்கப்பூரின் அதிபராகப் பணியாற்ற ஆற்றல் நிறைந்தவர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

3 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்திற்கு தர்மன் அமைச்சராக இருந்ததால் அவர் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட தகுதி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

டான் கோக் சோங் 500 மில்லியன் டாலர் பங்குத் தொகையைக் கொண்ட ஒரு நிறுவனத்தை நிர்வகித்தவர் என்ற முறையில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளார்.

“என் கடந்த கால சேவைகள், வாழ்க்கை வாழ்வதற்கான எனது காரணம், சிங்கப்பூரை அடுத்த கட்ட மேம்பாட்டுக்குக் கொண்டு செல்ல என்னால் என்ன செய்ய முடியும் என்ற அடிப்படையிலேயே நான் போட்டியிடுகிறேன். நிறைய மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன என்பதால்தான் நான் இந்தப் போட்டியில் இறங்க முடிவெடுத்தேன். சிங்கப்பூரின் அடுத்த அதிபர் வேறுவிதமான குணாதிசயங்கள் கொண்டவராக இருக்க வேண்டும் என மக்கள் கருதுகிறார்கள். அதற்காகவே அதிபராக நான் முன்வந்திருக்கிறேன். என் சொந்த நலன்களுக்காக அல்ல!” என தர்மன் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெறும். வாக்களிப்பு செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறும்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இன்னொரு புதுமையும் பின்பற்றப்படுகிறது. அதிபராக வருபவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை. சட்டரீதியாக வரையறுக்கப்பட்ட தகுதியுடையவர்கள் யார் வேண்டுமானாலும் அதிபராக முடியும்.

ஆனால், ஒரு குறிப்பிட்ட இனத்தவர் கடந்த 5 தவணைகளாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் அதன் பின் வரும் அடுத்த அதிபர் தேர்தல் அந்தக் குறிப்பிட்ட – இதுவரை தேர்ந்தெடுக்கப்படாத – இனத்தினர் மட்டும் அதிபராகப் போட்டியிட முடியும் என்ற முறையில் நடத்தப்படும்.