Home உலகம் இலங்கை அதிபர் தேர்தல் : அனுர குமார திசாநாயக்க வெற்றி பெறுவார் என கணிப்பு

இலங்கை அதிபர் தேர்தல் : அனுர குமார திசாநாயக்க வெற்றி பெறுவார் என கணிப்பு

193
0
SHARE
Ad
அனுர குமார திசாநாயக்க

* 3 முக்கிய வேட்பாளர்கள்
* போட்டி கடுமையாக இருக்கும் எனக் கணிப்பு
* திசாநாயக்க முன்னிலை
* ரணில் விக்கிரமசிங்கே சுயேச்சை வேட்பாளர்

கொழும்பு : தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெறும் இலங்கை அதிபருக்கான தேர்தலில் முன்னிலை வகிக்கிறார் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 18-ஆம் தேதி நள்ளிரவில் பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்தன.

திசாநாயக்கவின் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (JVP) என்பிபி (NPP) என்னும் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் முக்கிய கட்சியாகும்.

எனினும் போட்டி கடுமையாக இருக்கும் என்றும் யார் வெல்வார் என்பது இறுதிவரை பரபரப்பாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கே
#TamilSchoolmychoice

இலங்கை அதிபர் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் முக்கியமாக 3 வேட்பாளர்களிடையே மும்முனைப் போட்டியாக உருவாகி வருகிறது. நடப்பு அதிபர் ரணில் விக்கிரமசிங்க அதிபர் தேர்தலில் சுயேச்சையாகப்  போட்டியிடுகிறார்.

2022-இல் நடந்த மக்கள் எழுச்சிக்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். அந்த எழுச்சி அப்போதைய அதிபர் கோத்தாபாய ராஜபக்சேயை பதவி விலகி நாட்டை விட்டு வெளியேற நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

முக்கிய போட்டியாளர்களில் ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் கட்சி சகா சஜித் பிரேமதாசா (சமகி ஜன பலவேகய (SJB) அரசியல் கூட்டணியை உருவாக்கியவர்) மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் அடங்குவர்.

மற்ற முக்கிய வேட்பாளர்களில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேயின் மகன் நாமல் ராஜபக்சே ஒருவராவார்.

கோத்தாபாய ராஜபக்சே

இலங்கையில் கடைசியாக நேரடி அதிபர் தேர்தல் 2019-இல் நடைபெற்றது. அதில் எஸ்எல்பிபி (SLPP) வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்சே தனது முக்கிய எதிராளி சஜித் பிரேமதாசாவை தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார்.

2022 இலங்கை போராட்டங்களின் மத்தியில் கோத்தாபாய 2022 ஜூலை 14-ஆம் தேதி தனது பதவியிலிருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்குகளைப் பெற்று 2022 ஜூலை 21 அன்று இலங்கையின் 9-வது அதிபராகப் இடைக்காலத்திற்குப் பதவியேற்றார். 2019-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தாபாயவின் 5 ஆண்டுக் காலத் தவணையின் எஞ்சிய காலகட்டத்திற்கு மட்டுமே ரணில் பதவி வகிக்க முடியும் என இலங்கை அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.

இலங்கையில் அதிபருக்கே அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இன்று நடைபெறும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய அதிபர் இலங்கை அரசியலில் பல மாற்றங்களைக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.