Home Photo News துன் அப்துல்லா படாவி – மக்கள் தலைவர் அமரர் சுப்ரா – அரசியல் சம்பவங்கள்!

துன் அப்துல்லா படாவி – மக்கள் தலைவர் அமரர் சுப்ரா – அரசியல் சம்பவங்கள்!

82
0
SHARE
Ad
சாமிவேலு-அப்துல்லா படாவி-சுப்ரா

(கடந்த ஏப்ரல் 14-இல் நிகழ்ந்த முன்னாள் பிரதமர் துன் அகமட் அப்துல்லா படாவியின் திடீர் மறைவு பல பழைய நினைவுகளைத் தூண்டி விட்டது.அவற்றில் சில – மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான மக்கள் தலைவர் அமரர் டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் அவர்களுக்கும் துன் அப்துல்லா படாவிக்கும் இடையில் நிலவிய அரசியல் நட்புறவும், அதனைத் தொடர்ந்த சில சம்பவங்களுமாகும். படாவி-சுப்ரா இடையிலான அந்த சுவாரசிய சம்பவங்களை விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

2003-ஆம் ஆண்டு துன் மகாதீர் பதவி விலக, துன் அப்துல்லா படாவி பிரதமராக பதவியேற்ற சம்பவத்தை டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் (சுப்ரா) பெரும் எதிர்பார்ப்புடன் வரவேற்றார். அதற்கான தனிப்பட்ட காரணமும் அவருக்கு இருந்தது. மஇகா தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலுடன் பல தருணங்களில் ஏற்பட்ட மோதல்களில் – 22 ஆண்டுகால பிரதமரான மகாதீர் – தலையிட்டதில்லை. ஓரிரு தருணங்கள் தவிர!

இதன் காரணமாக பல சமயங்களில் சுப்ராவுக்கு மகாதீரிடம் ஏமாற்றம் ஏற்பட்டது. மகாதீருக்கும் சாமிவேலுக்கும் இடையில் இருக்கும் நெருக்கம் மகாதீரை மஇகா குறித்து நியாயமான சில முடிவுகள் எடுப்பதிலிருந்து தடுக்கிறது என சுப்ரா நினைத்தார். எனவேதான், மகாதீர் விலகி படாவியின் தலைமைத்துவம் மாறுவதால் மஇகா மீதான அம்னோவின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என சுப்ரா எதிர்பார்த்தார்.

2004 பொதுத் தேர்தல் –
சுப்ராவுக்கு நாடாளுமன்றத்தில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது

#TamilSchoolmychoice

பிரதமராகப் பதவியேற்ற 6 மாதங்களிலேயே மார்ச் 2004-இல் பொதுத் தேர்தலை அறிவித்தார் படாவி. துணைத் தலைவராக சுப்ராவுக்கும் சாமிவேலுவுக்கும் இடையில் அரசியல் மோதல்கள் அப்போது அரங்கேறிக் கொண்டிருந்தன. சுப்ராவுக்கு மீண்டும் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சாமிவேலு வாய்ப்பு வழங்க மாட்டார் என்ற தகவல்கள் கசியத் தொடங்கின.

அப்போதெல்லாம் ஆதரவாளர்களும் நண்பர்களும் சுப்ராவிடம் இதுகுறித்து விவாதித்தபோது – “மகாதீர் தலைமையில் சாமிவேலுவால் 1990-இல் அப்படிச் செய்ய முடிந்தது. ஆனால், இப்போது படாவி பிரதமராக இருப்பதால் அவ்வாறு செய்ய சாமிவேலு துணிய மாட்டார். படாவியும் நமக்கு ஆதரவாக இருப்பார்” என சுப்ரா அடிக்கடி கூறினார்.

மஇகா பொதுப் பேரவை ஒன்றில் சாமிவேலு-மகாதீர்-சுப்ரா

ஆனால், நடந்ததோ வேறுவிதமாக! 2004 பொதுத் தேர்தலுக்கான மஇகா வேட்பாளர்கள் பட்டியலை சாமிவேலு அறிவித்தபோது சுப்ரா பெயர் அதில் இல்லை. சுப்ரா ஆதரவாளர்கள் கொந்தளித்து, தன்னிச்சையாக, உடனடியாக அன்றிரவே பிரதமர் படாவியின் புத்ரா ஜெயா இல்லத்தின் முன்பு திரளத் தொடங்கினர்.

இதையறியந்த சுப்ரா, உடனடியாக டத்தோ வி.எல்.காந்தனை அழைத்து குழுமினர், நிலவரத்தைக் கூறி பிரதமர் இல்லத்திற்கு சென்று நமது ஆதரவாளர்களை, கட்டுப்பாட்டில் வைத்திருங்கள் – அசம்பாவிதங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அன்றிரவு திரண்டு தங்களின் ஆட்சேபத்தை படாவியின் பார்வைக்குக் கொண்டு சென்றனர். டத்தோ காந்தனும் அங்கு வந்து சுப்ரா ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார். பிரதமரின் பாதுகாப்பு குழுவினரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.

டான்ஸ்ரீ சுப்ரா

அப்போது அங்கு வந்த அப்போதைய கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னானும் சுப்ரா ஆதரவாளர்களைச் சந்தித்தார். தெங்கு அட்னானிடமும் காந்தன் தங்களின் ஆட்சேபத்தைக் கூறி சுப்ராவுக்கு நாடாளுமன்றத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தாங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக கூறினார். இத்தகைய ஆர்ப்பாட்டத்தால் முடிவுகள் மாறாது – முறையாக படாவியை அணுகுங்கள் என தெங்கு அட்னான் அங்கு திரண்டிருந்தவர்களிடம் அறிவுறுத்தி விட்டு பிரதமரைப் பார்க்க உள்ளே சென்றார்.

சுப்ராவுக்கு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் முறையீட்டுக் கடிதம் ஒன்றும் சுப்ரா ஆதரவாளர்களால் தேசிய முன்னணி தலைமைச் செயலாளராக இருந்த டான்ஸ்ரீ முகமட் காலில் யாக்கோப்பிடம் நேரில் வழங்கப்பட்டது.

அப்போதைய ஜோகூர்ஆட்சியாளர் சுல்தான் இஸ்கண்டார் கூட சுப்ராவுக்கு ஆதரவாக பிரதமரிடம் பேசியதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் முடிவு மாறவில்லை. சுப்ராவுக்கு 2004 பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக டாக்டர் ச.சுப்பிரமணியம் சிகாமாட் தொகுதியில் நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார்.

சுப்ராவுக்கு நாடாளுமன்றத்தில் போட்டியிட வாய்ப்பு தரப் போவதில்லை என சாமிவேலு படாவிக்கு நெருக்குதல் தந்ததாகவும் – தான் சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல் என்பதால் படாவியும் சக கூட்டணி கட்சித் தலைவர்களோடு மோதல்களை விரும்பவில்லை என்பதால் – அந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டதாகவும் சுப்ராவுக்கு தகவல் கூறப்பட்டது.

இருப்பினும் சுப்ரா தொடர்ந்து தேசிய முன்னணிக்கும் மஇகாவுக்கும் ஆதரவாக இருந்தார். சில தொகுதிகளுக்கு சென்று தேசிய முன்னணிக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்தார். 2004 பொதுத் தேர்தலில் – படாவியின் புதிய தலைமைத்துவம் – ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வருவேன் என்ற உறுதிமொழியோடு அவர் எடுத்த சில முன்னெடுப்புகள் – அவரின் இஸ்லாமியப் பின்னணி – இவ்வாறாக எல்லாம் சேர்ந்து 90 விழுக்காடு நாடாளுமன்றத் தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்றியது.

அன்வார் இப்ராகிமும் சிறையில் இருந்ததால் எதிர்க்கட்சிகளிடத்திலும் வலிமையான தலைமைத்துவம் இருக்கவில்லை. அன்வாரின் மனைவி வான் அசிசா தலைமையில் பிகேஆர் கட்சி இயங்கி வந்தது.

கட்சியின் துணைத் தலைவராக இருந்தும், தனக்கு 2004 பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து சுப்ரா ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தாலும், தொடர்ந்து படாவியை அடுத்தடுத்த ஆண்டுகளில் அடிக்கடி சந்தித்து வந்தார். ஓரிரு முறை சுப்ராவின் இல்லத்தில் நடந்த தீபாவளி பொது விருந்துபசரிப்புகளுக்கும் படாவி வருகை தந்தார்.

சுப்ராவை இரவு விருந்துக்கு
வீட்டுக்கு அழைத்த படாவி

2008-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பிற்பகலில் சுப்ரா தொலைபேசியில் என்னை அழைத்தார். “பிரதமர் படாவி என்னை சற்று முன்னர் கைப்பேசியில் அழைத்து அவரின் புத்ரா ஜெயா இல்லத்துக்கு இரவு விருந்துக்கு வரச் சொன்னார். நீயும் வா! காரில் பேசிக் கொண்டே செல்லலாம்” என்றார். நானும் புறப்பட்டுச் சென்றேன்.

அப்போது நான் சுப்ராவுக்கு செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். 2008 பொதுத் தேர்தல்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் பரபரப்புடன் உலவிக் கொண்டிருந்த நேரம். சிறையிலிருந்து வெளிவந்து பக்காத்தான் ராயாட் கூட்டணித் தலைவராகப் பொறுப்பேற்ற அன்வார் இப்ராகிம் தேசிய முன்னணிக்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார். 2008 ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட அவர் தகுதி பெற்று விடுவார் என்பதால் அதற்கு முன்பாகவே, பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு விடும் என்ற ஆரூடங்கள் வலுத்து வந்தன.

மாலை 6 மணியளவில் (1 ஜனவரி 2008) புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்றோம். போகும் வழியில் படாவி எதற்கு தன்னை திடீரென அழைத்தார், பொதுத் தேர்தல் தொடர்பான காரணமாக இருக்குமோ என சுப்ரா கூறிக் கொண்டே வந்தார். படாவியின் இல்லத்தில் சுப்ராவின் மற்றொரு நண்பர் பெர்னாமா சுந்தரமும் எங்களுடன் இணைந்து கொண்டார்.

சற்று நேரத்தில் கோல்ப் விளையாடி விட்டு அதே உடையுடன் சிறிய மின்கலக் (பேட்டரி) காரில் வந்திறங்கினார் படாவி. சுப்ராவைப் பார்த்ததும் உங்களின் மனைவி எங்கே எனக் கேட்டார். “என்னை மட்டும் பேசுவதற்கு அழைத்தீர்கள் என நினைத்தேன்” என்று சுப்ரா கூற, “இல்லை உங்கள் மனைவியையும் சேர்த்துத்தான் என்னுடன் இரவு விருந்துண்ண அழைத்தேன்” என்றார் படாவி.

சுப்ராவும் உடனடியாக தன் மனைவி புவான் தீனாவை அழைத்து விவரத்தைக் கூறினார். நாங்கள் வந்த காரை திரும்பவும் வீட்டுக்கு அனுப்பி மனைவியையும் ஏற்றி வர கார் ஓட்டுநரிடம் பணித்தார். சுப்ராவும் படாவியும் வீட்டிற்குள் செல்ல, நானும் பெர்னாமா சுந்தரமும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம்.

சுமார் ஒரு மணிநேரத்தில் புவான்ஸ்ரீ தீனாவும் அங்கு வந்து சேர்ந்தார். படாவி இரவு உணவுக்கு, தேசிய இருதயக் கழக மருத்துவமனையில் பணியாற்றும் தனது மருத்துவர் ஒருவரை மட்டும் அழைத்திருந்தார். வேறு யாரையும் அழைக்கவில்லை. சுப்ரா தம்பதியரோடு படாவியின் அன்றைய சந்திப்பும், இரவு விருந்தும் இரவு சுமார் 9 மணி வரை நீடித்தது.

2008 புத்தாண்டு, பிரதமர் படாவியுடனான சந்திப்புடன் இனிதே தொடங்கியிருக்கிறது என்ற மகிழ்ச்சி சுப்ராவுக்கு மனதில் நிறைந்திருந்தது. படாவியின் இல்லத்திலிருந்து இரவு வீடு திரும்பும்போது காரில், அவரின் பேச்சிலும் அது புலப்பட்டது.

2006 மஇகா தேர்தலில் சுப்ரா, சாமிவேலுவின் ஆதரவுடன் போட்டியிட்ட ஜி. பழனிவேலுவால் தோற்கடிக்கப்பட்டிருந்தார். எனவே, 2008 புத்தாண்டு தினத்தில் சுப்ராவை பிரதமர் படாவி அழைத்தபோது, அவர் மஇகாவின் துணைத் தலைவராகவும் இல்லை. கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. மஇகா செபுத்தே தொகுதி தலைவராக மட்டும் இருந்தார். எனினும் சுப்ராவுக்கு மரியாதை தந்து, பழைய நட்புக்காக அவரை அந்த புத்தாண்டு தினத்தன்று இரவு உணவுக்கு அழைத்திருந்தார் படாவி. அதன்காரணமாக சுப்ராவும் நெகிழ்ச்சியடைந்தார்.

2008 பொதுத் தேர்தல் –
மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சுப்ரா

அதைத் தொடர்ந்து, 2008 பொதுத் தேர்தலில் சுப்ரா மீண்டும் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்தன. சாமிவேலு தரப்பிலும் அவருக்கு நெருக்கமானவர்களும், சாமிவேலுவின் குடும்ப உறுப்பினர்களும் சுப்ராவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். சுப்ரா மீண்டும் நாடாளுமன்றத்தில் போட்டியிட, சாமிவேலுவுக்கு ஆட்சேபணை இல்லை என்ற ரீதியில் சுப்ராவிடம் தெரிவிக்கப்பட்டது.

2008 பொதுத் தேர்தல் மார்ச் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி நெருங்க, நெருங்க சாமிவேலு தரப்புக்கும் சுப்ரா தரப்புக்கும் இடையில் பல பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், இறுதியில் சுப்ராவுக்கு மீண்டும் நாடாளுமன்றத்தில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

மீண்டும் ஏமாற்றம் அடைந்தாலும், சுப்ரா வழக்கம்போல் நிலைகுலையாமல் தேசிய முன்னணிக்கு ஆதரவாக பல தொகுதிகளுக்கு பிரச்சாரங்களுக்கு சென்றார். படாவியின் சொந்தத் தொகுதியான கப்பளா பத்தாசுக்கும் சென்று அங்குள்ள இந்திய வாக்காளர்களிடையே பிரச்சாரம் செய்தார்.

எனினும், பல அம்சங்கள் படாவிக்கு எதிராகத் திரும்ப – 2004 இல் வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்த படாவியின் தலைமைத்துவம் அடுத்த 4 ஆண்டுகளில் 2008-இல் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது.

படாவி முன்னிலையில் மீண்டும் இணைந்த
சாமிவேலு – சுப்ரா

2008, மார்ச் 8 தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 10-ஆம் தேதி திங்கட்கிழமை, சுப்ரா படாவியின் பிரதமர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். 2008 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த சாமிவேலுவும் அப்போது அங்கிருந்தார். சுப்ராவும் சாமிவேலுவும் படாவியின் முன்னிலையில் சந்தித்து மீண்டும் இணைந்து மஇகாவின் வழி பாடுபட இணக்கம் கண்டனர்.

படாவியின் அலுவலகத்தில் இருந்தபடி என்னைக் கைப்பேசியில் அழைத்த சுப்ரா உடனே அன்று மாலையே தனது வீட்டில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்குமாறு பணித்தார். ஒரு பத்திரிகை அறிக்கையை தயாரிக்கும்படி கூறி அதற்கான உள்ளடக்கங்களையும் கைப்பேசியிலேயே தெரிவித்தார்.

படாவியின் அலுவலகத்தில் இருந்து இல்லம் திரும்பிய சுப்ரா கூடியிருந்த பத்திரிகையாளர்களிடையே “கட்சியை மீண்டும் மறுசீரமைக்க சாமிவேலுவுடன் இணைந்து பாடுபடப் போகிறேன்” என அறிவித்தார். மஇகாவின் தலைமைத்துவ மாற்றத்திற்கு இதுவே சரியான தருணம் – 2009-இல் நடைபெறவிருந்த மஇகா தேசியத் தலைவர் தேர்தலில் சுப்ரா போட்டியிட வேண்டும் – என எதிர்பார்த்திருந்த அவரின் ஆதரவாளர்களும் இந்திய சமூகத்தின் பல தரப்புகளும் – மீண்டும் அவர் மக்கள் ஆதரவை இழந்திருந்த சாமிவேலுவுடன் இணைவது கண்டு அவரின் முடிவால் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

எதிர்பார்த்தது போல சுப்ராவுக்கும் சாமிவேலுவுக்கும் இடையிலான இணக்கம் நீடிக்கவில்லை. 2009 மஇகா தேசியத் தலைவர் தேர்தல் வரை அமைதி காத்தார் சாமிவேலு. மீண்டும் தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சுப்ராவும் அவருக்கு ஆதரவு வழங்கினார்.

அடுத்த ஒரு மாதத்தில், தேசியத் துணைத் தலைவருக்கான தேர்தலுக்கு முன்பாக ‘சுப்ரா என்னை முதுகில் குத்தி விட்டார்’ என்ற ரீதியில் பேசினார் சாமிவேலு. துணைத் தலைவருக்கான போட்டியில் ஜி.பழனிவேலு மீண்டும் போட்டியிட, முன்னாள் துணையமைச்சரான டத்தோ சோதிநாதனும் அந்தப் பதவிக்குப் போட்டியிட்டார். மும்முனைப் போட்டியில் மீண்டும் தோல்வியடைந்தார் சுப்ரா. 2010-இல் சாமிவேலு பதவி விலக, அதன் பின்னர் சுப்ரா பழைய பகைமையை மறந்து பழனிவேலுவுடன் இணக்கம் பாராட்டினாலும், 2011 நவம்பரில் அவருக்கு நேர்ந்த எதிர்பாராத உடல் நலக் குறைவு – அவரின் அரசியல் செயல்பாட்டுக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைத்தது.

2008 பொதுத் தேர்தல் முடிவுகள் படாவியின் தலைமைத்துவத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. பொதுத் தேர்தல் தோல்விகளைக் காரணம் காட்டி, நஜிப் தந்த நெருக்குதலால் 2009-இல், பிரதமராகவும் அம்னோ தலைவராகவும் பதவி விலகினார் படாவி.

-இரா.முத்தரசன்